மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துவிட்டு முறைப்படி அக்கட்சியில் இணைந்தனர்.
ஹரியாணா தேர்தலுக்கு முன்பாக மல்யுத்த வீரர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்ற ஊகங்கள் நிலவி வந்த நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்துவிட்டு முறைப்படி கட்சியில் இணைந்துள்ளனர்.
இவர்களில் இருவருமா அல்லது யாரவது ஒருவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது விரைவில் தெரியவரும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக வீரர்கள் இருவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடந்த புதன்கிழமை டெல்லியில் சந்தித்தனர். இதுதொடர்பான புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வினேஷ்போகத் இந்திய ரயில்வே பணியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய ரயில்வேயில் பணியாற்றியது “என் வாழ்க்கையின் பெருமையான, மறக்கமுடியாத தருணமாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.