திருத்தணியில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில் ஒரு குழந்தை உயிரிழந்தது; 3 பேர் தீக்காயமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகப்பா நகர் பகுதியில் உள்ள 3 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசிப்பவர் பிரேம்குமார் (32). இவரது வீட்டின் கீழ் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் மின் கசிவு காரணமாக பற்றிய தீ, 3 மோட்டார் சைக்கிள்களில் பரவியது. தொடர்ந்து, அத்தீ, பிரேம்குமார் வசித்த வீட்டினுள் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதில் சிக்கிய பிரேம்குமார், அவரது மனைவி மஞ்சுளா (31), குழந்தைகள் மிதுலன் (2), நபிலன் (1) உள்ளிட்ட 4 பேரும் தீக்காயம் அடைந்தனர்.
இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த திருத்தணி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, 4 பேரையும் மீட்டனர். தொடர்ந்து, திருத்தணி போலீஸார் தீ விபத்தில் காயமடைந்த 4 பேரையும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற 4 பேரும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நபிலன் உயிரிழக்க மற்ற 3 பேரும் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.