குரூப் 2 போட்டித் தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுரை கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்று டி.என்.பி.எஸ்.சி. (குரூப்-2) தேர்வினை எழுத உள்ள தேர்வர்களை அமைச்சர் அர.சக்கரபாணி சந்தித்து தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிட வாழ்த்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், “அரசுப் பணிக்கான தேர்வுகளில் நகரம் மற்றும் கிராமப் புறங்களைச் சேர்ந்த தமிழக இளைஞர்கள் தன்னம்பிக்கையுடனும், முழுத் தகுதியுடனும் அதிகமானோர் பங்கேற்றிட வழிகாட்டிட வேண்டும் என்ற எண்ணத்தில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் துவக்கப்பட்டது. இதில் தற்போது சுமார் 200 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-2 மற்றும் 2ஏ) தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தேர்வினை இந்த பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்ற 170 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். தைரியத்துடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தன்னபிக்கை, விடா முயற்சி, உழைப்பு இருந்தால் வெற்றி பெறலாம்” என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர்கள் பழனிச்சாமி, சசி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.