“நாம் கடவுளாக மாற வேண்டுமா, வேண்டாமா என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள். நாம் கடவுளாகி விட்டோம் என்று நாமே பிரகடனப்படுத்த முடியாது” என்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். புனேவில் நடந்த நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் குழந்தைகளின் கல்விக்காக பணியாற்றிய பைய்யாஜி என்று அழைக்கப்பட்ட ஷங்கர் தினகர் கனே என்பவரின் பணிகளை நினைவு கூறும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், “அமைதியாக இருப்பதற்கு பதில் சிலர் மின்னலைப் போல பிரகாசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் மின்னல் வெட்டி முடித்த பின்பு முன்னை விட இருள் அதிகமாகி விடும். அதனால் சேவகர்கள் தீபத்தைப் போல பிரகாசித்து தேவைப்படும் போது ஒளிர வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஷங்கர் தினகர் கனே, 1971 வரை மணிப்பூரில் குழந்தைகளின் கல்விக்காக பணியாற்றினார். மேலும் அவர் மாணவர்களை மகாராஷ்டிராவுக்கு அழைத்து வந்து அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தார்.
மேலும் மணிப்பூரின் தற்போதைய நிலைமை பற்றி பேசிய மோகன் பாகவத், “மணிப்பூரில் தற்போது நிலவும் சூழல் மிகவும் கடினமாகவே உள்ளது. அங்கு பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உள்ளூர்வாசிகள் தங்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளனர். வியாபாரம் மற்றும் சமூக பணிகளுக்காக அங்கு சென்றவர்களுக்கு நிலைமை இன்னும் சவாலாகவே உள்ளது.
ஆனாலும் இதுபோன்ற சூழ்நிலைகளிலும் சங்கத்தின் தொண்டர்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டு அமைதியை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். என்ஜிஒ-க்களால் எல்லா விஷயங்களையும் கையாள முடியாது. ஆனால் சங்கம் தன்னால் முடிந்தவைகளைச் செய்வதில் எந்த ஒரு விஷயத்தையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சங்கத்தினர் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர்.” என்று தெரிவித்தார்.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குகி பழங்குடியினர் மற்றும் மைத்தேயி குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 60,000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.