சட்ட விரோத செயல்கள் தொடர்பாக பொதுமக்கள் 24 மணி நேரமும் வாட்ஸ் அப்பில் தகவல் அளிக்கலாம் – விருதுநகர் எஸ்.பி

விருதுநகர் மாவட்டத்தில் நடக்கும் சட்ட விரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் 24 மணி நேரமும் எனக்கு வாட்ஸ் அப்பில் நேரிடையாக தகவல் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் எஸ்.பி கண்ணன் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீவில்லிபுத்தூர் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட நத்தம்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் விருதுநகர் எஸ்.பி கண்ணன் நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் நேற்று இரவு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் குறித்து இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் உடன் எஸ்பி ஆலோசனை நடத்தினார்.

அப்போது எஸ்.பி கண்ணன் கூறுகையில்: விருதுநகர் மாவட்டத்தில் 172 இடங்களில் 315 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 7 ஆம் தேதி ராஜபாளையத்தில் நடக்கும் தனியார் ஊர்வலத்தில் 300 போலீஸாரும், 8 ஆம் தேதி சிவகாசி, அருப்புக்கோட்டையில் நடக்கு விநாயகர் ஊர்வலத்திற்கு 900 போலீஸாரும், 9 ஆம் தேதி ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர் உட்பட மாவட்டத்தில் பிற பகுதிகளில் நடக்கும் ஊர்வலத்தில் 1,500 க்கும் மேற்பட்ட போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர்.

ஒவ்வொரு ஊரிலும் 1 ஏடிஎஸ்பி, 12 டிஎஸ்பி, 12 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமைதியான முறையில் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அருப்புக்கோட்டை பிரச்சினை தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் பள்ளி, கல்லூரி அருகே தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை பொருட்கள் விற்பனை மற்றும் சட்ட விரோத செயல்கள் குறித்து 24 மணி நேரமும் பொதுமக்கள் எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு (99402 77199) தகவல் அளிக்கலாம். தவறு செய்வர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி கண்ணன் கூறினார். ஶ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி ராஜா, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.