“அமைச்சர் அன்பில் மகேஸ் மிரட்டலுக்கு ஆன்மிக பேச்சாளர்கள் அஞ்ச மாட்டார்கள்” – தமிழக பாஜக கருத்து

“அமைச்சர் அன்பில் மகேஸ் மிரட்டலுக்கு ஆன்மிக சொற்பொழிவாளர்களும் அஞ்ச மாட்டார்கள். இந்து மதமும் அஞ்சாது,” என்று அசோக் நகர் அரசுப் பள்ளி சம்பவத்துக்கு பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

கோவையில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இச்சம்பவம் குறித்தும், அமைச்சரின் எச்சரிக்கை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எஸ்.ஆர்.சேகர், “சென்னை அரசுப் பள்ளியில் சொற்பொழிவு நிகழ்வு நடத்தியது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ள கருத்து அவரை விட வயதில் சிறியவரான மகாவிஷ்ணு கொண்டுள்ள முதிர்ச்சி கூட அமைச்சருக்கு இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒரு ரவுடி பேசுவதைப் போல அமைச்சர், மகா விஷ்ணுவுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். இது கண்டிக்கதக்கது.

கடவுள் இல்லை என்ற சித்தாந்தத்தை மனதில் வைத்துக் கொண்டு இந்த விவாகரத்தை அணுகுகின்றனர். இந்த மிரட்டல் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும், தனி மனித சுதந்திரத்துக்கும் எதிரானது. அமைச்சர் அன்பில் மகேஸ் பாவ, புண்ணியங்களை நம்பாதவரா? அவரது தலைவர் கருணாநிதி சிலை முன்பு படையல் போட்டு வணங்குகின்றனரே, அதை எவ்வாறு பார்ப்பது? எனவே, இவர்கள் வீட்டில் ஒரு வேஷம், வெளியில் ஒரு வேஷம் போடுகின்றனர்.

திமுக அரசு ஆன்மிக சொற்பொழி நடத்துபவர்களை மிரட்டி பார்க்கிறது. இதற்கு ஆன்மிக சொற்பொழிவாளர்களும் அஞ்ச மாட்டார்கள், இந்து மதமும் அஞ்சாது. இந்து மதத்தின் மீதும், திருவள்ளுவர் மீதும் திமுக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாஜக எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்,” என்று எஸ்.ஆர்.சேகர் கூறினார்.