மத்திய அரசு திட்டங்கள் மக்களைச் சென்றடையும் வகையில், மக்கள் அதிகம் பயனடையும் வகையில் திட்டப் பெயர்களில் வட்டார மொழியை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு புதுச்சேரி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி பிராந்தியமான கேரளம் அருகே உள்ள மாஹேக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பயணம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து மாஹே நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் த.குலோத்துங்கன், மண்டல நிர்வாக அதிகாரி மோகன் குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர். மண்டல நிர்வாக அதிகாரி காணொலி காட்சி மூலமாக நிர்வாக செயல்பாடுகள் குறித்து விவரித்தார். அப்போது பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துணைநிலை ஆளுநர் கேட்டறிந்தார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய துணைநிலை ஆளுநர், “மத்திய அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில், மக்கள் அதிகம் பயனடையும் வகையில் திட்டப் பெயர்களை வட்டார மொழிகளைப் பயன்படுத்த வேண்டும். மாஹே பகுதியை சிறந்த சுற்றுலா பகுதியாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாஹே பகுதியின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையிலான பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக, மாஹே பகுதியை புனராக்கம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.