புதுக்கோட்டை கவிராசன் அறக்கட்டளையின் சார்பில், கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
அரசு விருது பெறாத சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து, ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. புதுக்கோட்டை கவிராசன் அறக்கட்டளை. தொடர்ந்து 19-ஆவது ஆண்டாக, இன்று நடைபெற்ற விழாவை, அறக்கட்டளையின் இணை-நிர்வாக அறங்காவலர், கவி.முருகபாரதி ஒருங்கிணைத்தார். விழாவுக்கு, ஸ்ரீ பாரதி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் முனைவர் மா.குமுதா மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் செ.கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரிப் பேராசிரியர் முனைவர். மு.பாலசுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த விழாவில், புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர். சா.மேரி ஹேமலதா, கல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் சி.செந்தூர் பாண்டி, புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் ஹ.மீனாட்சி சுந்தரம், மற்றும் கோபாலபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் வெ.கோவிந்தராஜன் ஆகியோருக்கு, “நட்சத்திர ஆசிரியர்” விருதுகளை, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர். நெல்லை ஜெயந்தா வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.
விழாவில், அவர் பேசியதாவது: “பள்ளி, கல்லூரிகளில் வகுப்பு எடுப்பவர்கள் மட்டுமே, ஆசிரியர் அல்லர். நாம் யாரிடமிருந்து கற்றுக் கொண்டாலும், அவர்கள் ஆசிரியர்கள்தான். இந்த ஆசிரியர் தினமானது, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் என்பது, உங்களுக்குத் தெரியும். ஆனால், சாப்பிட வாழை இலை வாங்கக் கூட வசதி இல்லாது, தரையில் சோறு போட்டு உண்ணும் வறுமை நிலையில் இருந்து, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் அவர். உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதை நமக்குக் கற்பிக்கிறார். ஒரு திரைப்படத்தின் பாடலுக்கு, நான் எழுதிய பல்லவியை, இயக்குநர் மாற்றச் சொல்கிறார். அவர் எதிர்பார்த்தபடி எழுத மூன்று நாட்களாக முயற்சி செய்தேன் நான். அப்போது, என் ஞானகுருவான கவிஞர் வாலி அவர்களிடமிருந்து, வேறு ஒரு காரணத்திற்காக அழைப்பு வந்தது. குழப்பமுடன் அவரை சந்தித்த எனக்கு, அற்புதமான பல்லவியை, சில நிமிடங்களில் தந்தார்.
வார்த்தைகளின் வங்கியாகத் திகழ்வதன் அவசியத்தை, வார்த்தைகளில் வித்தையை, அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன். திருக்குறளில், செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தில், “பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின், நன்மை கடலின் பெரிது” எனும் பாடலுக்கு அனைவரும், பயன் கருதாமல் ஒருவர் செய்த உதவி, கடலின் அளவை விடப் பெரிது என்றே உரை எழுதியுள்ளனர். ஆனால், கடல் கூட மழை வரும் என்ற பயனை எதிர்பார்த்து இருப்பதால், அதை விடப் பெரியதாகும் என்று தன்மையைக் குறிப்பதாக, அந்த நூலில் எழுதியுள்ளார், செல்வகணபதி. இப்படி, நூல்களை வாசிப்பதால், ஏராளமாகக் கற்கலாம். அவையும், ஆசிரியர்களே.
ஒரு மருத்துவமனை வளாகத்தில், திரைப்படப் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பின் கேமரா கோணத்திற்குள் வருவதாகச் சொல்லி, அங்கே இருந்த ஒரு இட்லிக் கடையை அப்புறப்படுத்த எண்ணினர். ஒரு தயாரிப்பு நிர்வாகி, இட்லி விற்றுக் கொண்டிருந்த பாட்டியிடம் சென்று, அனைத்து இட்லிகளையும் தானே வாங்கிக் கொள்வதாக, நைசாக சொல்லி, பணத்தைக் கொடுத்தார். பணத்தை வீசி எறிந்த பாட்டி, இந்தப் பணத்திற்காக அனைத்தையும் ஒருவரிடம் விற்று விட்டால், என் இட்லிகளை நம்பி இங்கே இருக்கும் நோயாளிகள் என்ன செய்வார்கள்? என்று கேட்டார். அவரிடம், தொழில் அறத்தைக் கற்றுக் கொண்டேன். இப்படி, ஒவ்வொருவரிடம் இருந்தும், ஒன்றைக் கற்கலாம். ஏராளமான பெண் சாதனையாளர்கள் உள்ளனர். ஆயினும், இரண்டு நோபல் பரிசு பெற்ற மேரி கியூரி-யின் வரலாற்றை நீங்கள் வாசிக்க வேண்டும். தொடர்ந்து கற்றால், நீங்களும் அவரைப் போல, உலகப்புகழ் அடையலாம்!” என்று பேசினார்.
விழாவில், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி, விவசாயிகள் சங்கத் தலைவர் தனபதி, லயன்ஸ் அமைப்பின் நிர்வாகி ஜவஹர், ஜேசி அமைப்பின் நிர்வாகி அன்பரசன், ரோட்டராக்ட் அமைப்பின் நிர்வாகி செல்வக்குமார், கவிராசன் இலக்கியக் கழக நிர்வாகி குருஸ்ரீராம், மற்றும் ஏற்கனவே விருது பெற்ற ஆசிரியர்கள், கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.