“மாணவர்களை சுயமாக சிந்திக்க வைக்கும் கல்விதான் சிறந்த கல்வி. அந்த வகையில் பார்த்தால், இந்தியாவிலேயே தமிழகத்தின் கல்வி தான் சிறந்த கல்வி. தமிழகத்தின் பாடத்திட்டத்தை படித்த பலர் விஞ்ஞானிகளாக, மருத்துவர்களாக உள்ளனர். சிலர் இதை பொறுத்துக்கொள்ள முடியாமல், வயிற்று எரிச்சலில் உள்ளனர்.” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தின விழா இன்று வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 375 ஆசிரியர்கள்களுக்கு டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதினை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “விருதுபெறும் அத்தனை ஆசிரியர்களுக்கும் ஒரு மாணவனாக எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் பணி என்பது மற்ற பணிகளைப் போல கிடையாது. ஒரு தலைமுறையை உருவாக்கும் அறப்பணி. கல்வி வழங்கும் உன்னதமான பணியைத் தான் ஆசிரியர்களாகிய நீங்கள் செய்து வருகிறீர்கள். வழக்கமாக மாணவர்கள் தான் ஆசிரியர்களிடம் வெரி குட் வாங்குவார்கள்.
ஆனால் சிறப்பாக தங்கள் பணிகளை செய்தமைக்காக ஆசிரியர்களாகிய நீங்கள் வெரிகுட் பெற்று இந்த விருதினை பெற்றுள்ளீர்கள். ஒரு வகையில் பார்த்தால் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அனைவருமே ஆசிரியர்கள் தான். தமிழர்களுக்கு மானம், அறிவு ஆகியவற்றை புகட்டியதால் தான் தந்தை பெரியாரை நாம் இன்றும் ‘அறிவு ஆசான்’ என்று அழைக்கின்றோம். அறிவோடு சேர்த்து மானத்தையும் சொல்லிக் கொடுத்தவர் தந்தை பெரியார் மட்டுமே. பகுத்தறிவுக் கொள்கைகளை எளிதில் புரியும் வகையில் மக்களுக்கு எடுத்துக் கூறியவர் பெரியார்.
மாணவர்களை சுயமாக சிந்திக்க வைக்கும் கல்விதான் சிறந்த கல்வி. அந்த வகையில் பார்த்தால், இந்தியாவிலேயே தமிழகத்தின் கல்வி தான் சிறந்த கல்வி. தமிழகத்தின் பாடத்திட்டத்தை படித்த பலர் விஞ்ஞானிகளாக, மருத்துவர்களாக உள்ளனர். சிலர் இதை பொறுத்துக்கொள்ள முடியாமல், வயிற்று எரிச்சலில் உள்ளனர். அதேபோல ஆரம்ப காலகட்டத்தில் பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டு, தனது பொதுவாழ்வை தொடங்கியவர் அறிஞர் அண்ணா. கருணாநிதியின் முதல் பணியே ஆசிரிய பணி தான் காலநேசன், முரசொலி ஆகிய நாளிதழ்களில் ஆசிரியராக தனது பணியை தொடங்கியவர். அதனால் தான் நமது திமுகவுக்கு ஆசிரியர்கள் மேல் எப்போதும் ஒரு தனி பற்று உண்டு.
நமது தமிழக முதல்வர்கூட அதனால் தான் ஆசிரியர்களிடத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார். அதனால் தான் தமிழக பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக அமைந்தது. இதன் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் தற்போது பயன் அடைந்து வருகின்றனர்.
தற்போது ஒரு படி மேலே சென்று, அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் பெண்கள் பயன்பெறும் வகையில் ‘புதுமைப்பெண் திட்டம்’ கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் மூன்று லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஆகஸ்ட் மாதம் முதல், ‘தமிழ்ப் புலவன்’ என்ற திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் ஆண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 3 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இன்று அரசுப் பள்ளியில் படித்த எத்தனையோ மாணவ – மாணவியர் இஸ்ரோ போன்ற இடங்களில் உயர் பதவிகளை வகிக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், ஆசிரியராக நீங்கள் தான்.தற்போது நமது தமிழக அரசு சார்பில் முதன் முதலாக வெளிநாடு செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் முழு செலவையும் அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
மனிதர்களுக்கு மட்டுமே சிந்திக்கின்ற திறமை உள்ளது. அந்த சிந்தனையை தூண்டுகின்ற ஆற்றல் ஆசிரியர்களிடம் மட்டுமே உள்ளது. ஆரோக்கியமான மாணவனால் மட்டுமே நன்றாக படிக்க முடியும். ஆரோக்கியம் காக்க நன்றாக விளையாட வேண்டும். அதனால் தயவு செய்து விளையாட்டு பாடவேளைகளை மட்டும் ஆசிரியர்கள் கடன் கேட்காதீர்கள். ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக முதல்வர் தனிக் கவனம் செலுத்தி பரிசீலித்து வருகிறார். அவை அனைத்தும் விரைவில் நிறைவேற்றித் தரப்படும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், “ஓயாமல் நமக்காக உழைத்துக்கொண்டிருந்தவர் ஓய்வெடுக்கச் சென்றாலும், நமக்காக ஓயாமல் உழைக்கக் கூடிய இருவரை விட்டுச்சென்றார். தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தான் அது. தத்துவவியலாளர் பிளாட்டோவின் கூற்றுப்படி இரண்டு கால் உள்ள விலங்குக்கு கல்வி கொடுத்து அவனை மனிதன் ஆக்குபவர்கள் தான் ஆசிரியர்கள். ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு திருநாள் உண்டு.
அவரவருக்கு என்று கடவுள்கள் உண்டு. ஆனால் அனைத்து மதத்தினருக்கும், அனைத்து மனிதர்களுக்கும் கடவுள் என்றால் அது ஆசிரியர்கள்தான். அனைத்து மதத்தினரும் கொண்டாடப்பட வேண்டிய திருவிழா இந்த ஆசிரியர்கள் தினம்தான். ஆசிரியர்களாகிய நீங்கள் இல்லையெனில் இந்த உலகம் கிடையாது. நீங்கள் இல்லையெனில் இந்த உலகம் இயங்காது என்பது மிகையில்லாத உண்மை.
‘உணவு இல்லாதவனுக்கு உணவும். உடை இல்லாதவனுக்கு உடையும். வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதுபோல கல்விக் கிடைக்காதவனுக்கு கல்விக் கொடுக்கப்பட வேண்டியது அவசியம்’ என்கிறார் தந்தை பெரியார். இந்த நான்கு அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கான திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகின்றார்.‘நம்முடைய மொழியை நாம் கண் போலக் காத்து வருகின்றோம். அந்தக் கண்ணில் சிறு எரிச்சல் உண்டானால்கூட உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுவது போல இருக்கும். அந்தக் கண்ணுக்கு மையிடுவதைப் போல பிற மொழிகளைப் பயன்படுத்த வேண்டும்.
அந்த மையை திணிக்கக் கூடாது. வேண்டுமென்றால் மட்டுமே மொழி என்னும் கண்ணுக்கு மையிட வேண்டும். அந்த மை அதிகமானால் கண்ணை எப்படி எரித்துவிடுமோ, அதுபோல பிறமொழிகள் திணிக்கப்படும் போது ஆபத்து அதிகமாகும். இதை மத்திய அரசிலுள்ள தலைவர்கள் உணர்வார்கள்” என்று அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக குழு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினர் செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி, எழிலரசன், சுந்தர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.