ராகுல்காந்தியுடன் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு

மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இன்று புதுடெல்லியில் சந்தித்தனர்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகிய இருவரும் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்படலாம் என ஊகங்கள் வெளியாகின. எனினும், இது குறித்து காங்கிரஸ் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும், ஹரியாணா பொறுப்பாளருமான தீபக் பபாரியாவிடம் இதுகுறித்து நேற்று கேட்டபோது, செப்டம்பர் 5ம் தேதி இது குறித்து தெளிவுபடுத்தப்படும் என்று பதிலளித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோருடன் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் பாஜக எம்.பி.,யும், முன்னாள் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவருமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கிற்கு எதிராக 2023 இல் நடந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் மீதான போராட்டத்தில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். அப்போது, அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது.

ஹரியாணா சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், 66 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஹரியாணா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.