டன் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதி விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையம் நிறுவுவதற்கும், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில், ஈட்டன் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில், அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்துள்ளதோடு, 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் முனைப்போடு எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக ஏராளமான தொழிற்சாலைகள் கடந்த மூன்றாண்டுகளாக உருவாகி வருகிறது. தொழில் வளர்கிறது என்றால் மாநிலம் வளர்கிறது, அதன்மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மூலமாக மாநிலத்தின் சமூக, பொருளாதார நிலை உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், வளர்ச்சியின் அடையாளமாக திகழும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் அதிக அளவில் தொடங்கிட முதலீடுகளை ஈர்த்திடும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஈட்டன் நிறுவனம்: ஈட்டன் கார்ப்பரேஷன் நிறுவனம் என்பது தரவு மையம், பயன்பாடு, தொழில்துறை, வணிகம், இயந்திர கட்டிடம், குடியிருப்பு, விண்வெளி மற்றும் இயக்க சந்தைகளுக்கான உற்பத்தி மற்றும் பகிர்மான பணிகளை மேற்கொள்ளும் மேலாண்மை நிறுவனமாகும்.
தமிழக முதல்வர் முன்னிலையில், ஈட்டன் நிறுவனத்திற்கும் தமிழக அரசிற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அஷ்யூரன்ட் நிறுவனம்: அஷ்யூரன்ட் நிறுவனம் பார்ச்சூன் 500 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும், இந்நிறுவனம் அட்லாண்டாவை தலைமையிடமாக கொண்டு இடர் மேலாண்மை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. சொத்து, விபத்து, நீட்டிக்கப்பட்ட சாதனங்களின் பாதுகாப்பு போன்ற பலவிதமான சிறப்பு மற்றும் முக்கிய சந்தை காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் அட்லாண்டாவில் அமைந்துள்ளது.
தமிழக முதல்வர் முன்னிலையில், அஷ்யூரண்ட் நிறுவனத்திற்கும் தமிழக அரசிற்கும் இடையே, அஷ்யூரண்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.