“சென்னை மாநகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்,” என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.
ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் பகுதியாக சென்னை மாநகராட்சி உள்ளது. கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் தாக்கத்தால், சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில், பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தலைமையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 22 தொகுதிகளின் எம்எல்ஏக்கள், மண்டலக்குழு தலைவர்கள், மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, மின்துறை, மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஏற்கெனவே தெரிவித்த வெள்ள பாதிப்பு பிரச்சினைகள் குறித்தும், அதற்கு மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுக்கு விளக்கப்பட்டது.
அப்போது சில பிரச்சினைகள் குறித்த மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என சில எம்எல்ஏக்கள் புகார் தெரிவித்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும், பணிகளை விரைந்து முடிக்குமாறும் அமைச்சர் உதயநிதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “அதிகாரிகள் அனைவரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த ஆய்வுக்கூட்ட முடிவுகள் குறித்து முதல்வரிடம் அறிக்கையாக அளிக்க இருக்கிறேன். திட்டப்பணிகளுக்கான பிற துறை அனுமதிகளை முன்கூட்டியே பெற்றுவிட்டதாக என்னிடம் தவறான தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அதன்பிறகே அனுமதி பெறப்படுகிறது. இதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்” என்றார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன், நீர்வளத்துறை செயலர் மணிவாசன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய், மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.