தேசிய கல்விக்கொள்கையில் மாநில அரசு இரட்டை வேடம் போடுகிறது – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் எம்.வி.பி.ராஜா தலைமை தாங்கினார். உறுப்பினர் அடையாள அட்டையை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:- மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது அக்கறை இல்லாமல், ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாமல் இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு நிதியை தர மறுத்து வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்டம், ஆசிரியர் கல்வி திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மழலையர் முதல் மேல்நிலைக்கல்வி வரை அனைவருக்கும் தரமான கல்வி, ஆசிரியர் ஊதியம் உள்ளிட்ட தேவைகள் இந்த நிதி மூலம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் 60 சதவீதம் மத்திய அரசு பங்கும், 40 சகவீதம் மாநில அரசு பங்கும் உள்ளது. கடந்த 2024-2025 ஆம் ஆண்டில் இதற்காக ரூ.3,586 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தொகை நான்கு தவணையாக வழங்கப்படும். முதல் தவணையான ரூ.573 கோடியை ஜூன் மாதமே வழங்கப்பட வேண்டும், ஆனால் செப்டம்பர் மாதம் பிறந்தும் இதுவரை வழங்கப்படவில்லை.

புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்தை இணைக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டத்தில் இணைந்த பின்பு தான் நிதி ஒதுக்கப்படும் என்றும், ஏற்கனவே தமிழக அரசு இந்த திட்டத்தில் சேர ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் மத்திய கல்வி துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால் தமிழக கல்வித்துறை அமைச்சரோ புதிய கல்விக் கொள்கையில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு சொல்வது நியாயமில்லை என்று கூறுகிறார்.

இன்றைக்கு கல்விக் கொள்கையில் மாநில அரசு இரட்டை வேடம் கொண்டு, நீலிக் கண்ணீர் வடித்து வருகிறது. 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தமிழகத்திற்கு எந்த கடமையும் ஆற்றவில்லை. கல்வி நிதியில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக ரெயில்வே துறைக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டில் தெற்கு ரெயில்வேக்கு புதிய திட்டத்திற்கு மட்டும் ரூ.976 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது வெளியான பிங்க் புத்தகத்தில் அந்தத் தொகை ரூ.301 கோடியாக குறைத்து வெளியிடப்பட்டுள்ளது. இரட்டை ரெயில் பாதை திட்டத்திற்கு தேர்தலுக்கு முன்பு ரூ.2,214 கோடி ஒதுக்கப்பட்டது, தற்போது அது ரூ.1,978 கோடியாக சுருங்கிவிட்டது.

மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி ரெயில்வே திட்டத்திற்கு ரூ.25 கோடியாக ஒதுக்கப்பட்டது, தற்போது ரூ.18 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை, மாமல்லபுரம், கடலூர் கடற்கரை சாலைக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது, தற்போது ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தனுஷ்கோடி ரெயில்வே திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இந்த திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒரு கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.56 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரை, கோவை போன்ற மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி இல்லை, ஆனால் கர்நாடகத்தில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி வழங்கினார்கள். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி இல்லை, ரெயில்வே துறைக்கு நிதியில்லை, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி இல்லை, வளர்ச்சிக்கு நிதி இல்லை, வறட்சிக்கு நிதி இல்லை என தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்யலாமா? மத்திய அரசு நிதி தரவில்லை, அதைப் பெற்றுத்தர மாநில அரசுக்கு வக்கில்லை. இதற்கெல்லாம் ஒரே நிரந்தர தீர்வு 2026 இல் எடப்பாடியார் முதலமைச்சராக ஆவது தான் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், தவசி, தமிழரசன், மாநில நிர்வாகிகள் துரை தனராஜன், வெற்றி வேல், டாக்டர் விஜயபாண் டியன், நகர செயலாளர் பூமா ராஜா, ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன், மாவட்ட அணி நிர்வாகிகள் செல்லம் பட்டி ரகு, காசிமாயன், மகேந்திரபாண்டி, சிவசக்தி, மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் எம்.செல்வகுமார், சிந்து பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.