மதுரை, திருச்சி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, திருச்சி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் புதிதாக கட்டப்பட்டன. இத்தகைய அரசு மருத்துவ கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த மருத்துவ கல்லூரிகளில் டீனாக பணியாற்றியவர்கள் வயது மூப்பின் காரணமாக பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனை எதிர்த்து மதுரையை சேர்ந்த வெல்விகா மேரி என்ற பெண் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அவர் அளித்திருந்த மனுவில் மதுரை தென்மாவட்டத்தில் உள்ள பெரிய மருத்துவ கல்லூரி, இங்கு தினமும் 10 ஆயிரத்திற்கும் மேலான வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதே போல 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென் தமிழகத்தில் புற்றுநோய்கான சிறப்பு சிகிச்சை மையம், எலும்பு மாற்று சிகிச்சை மையம் போன்ற பல்வேறு சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கல்லூரியில் முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதால் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதே போல மற்ற கல்லூரிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. என்வே தென் மாவட்டத்தில் காலியாக உள்ள மருத்துவ கல்லூரி முதல்வர் பணியிடங்களை விரைந்து நிரப்ப உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திலக் குமார் இந்த கல்லூரிகளில் முதல்வர்களை நியமனம் செய்வதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுவிட்டது. விரைந்து கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர். அப்போது பேசிய நீதிபதிகள் ஏற்கனவே பட்டியல் தயார் செய்யப்பட்டுவிட்டது. இன்னும் ஏன் கால தாமதம் செய்தீர்கள். எனவே விரைந்து அந்த கல்லூரிகளுக்கான முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த நியமனம் சம்மந்தமான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.