“அண்மையில் பழனியில் நடைபெற்றது ஆன்மிக மாநாடு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சரியாகத்தான் பேசியுள்ளார், அந்த மாநாடு இந்து விரோத மாநாடு தான். முருகக் கடவுளை வைத்து அரசியல் செய்வதை இந்துக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.” என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் மடத்துத்தெருவில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 10 அடி உயரத்தில் குலதெய்வ வழிபாடு காக்கும் விநாயகர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத், நடிகை கஸ்தூரி, இந்து மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் டி.குருமூர்த்தி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு கஜ.கோ.அஸ்வ பூஜைகள் நடைபெற்றன.
இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் இந்து விரோத தீய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அண்மையில் பழனியில் நடைபெற்றது ஆன்மிக மாநாடு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சரியாகத்தான் பேசியுள்ளார், அந்த மாநாடு இந்து விரோத மாநாடு தான். முருகக் கடவுளை வைத்து அரசியல் செய்வதை இந்துக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பணத்தில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார், அண்மையில் துபாய் நாட்டிற்குச் சென்று முதலீட்டை ஈர்க்கின்றோம் எனச் சென்றார். ஆனால் தம்புடி பைசா கூட வரவில்லை.
விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, எந்த காவல் துறை அதிகாரியாவது அத்துமீறினால், அவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பாஜக மற்றும் அனைத்து இந்து அமைப்பினர், அக்கிரமங்களை ஏற்கமாட்டோம். நாங்கள் அதைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். 2-ம் தேதி மாலை பாஜக உறுப்பினர்கள் புதுப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 24 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர் சேர்க்க அறிவுறுத்தி உள்ளார்கள். தமிழகத்தில் 1 கோடி உறுப்பினர் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
மொழிக்கொள்கை குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் முடிவு செய்ய வேண்டும். திராவிடம் என்றாலே ஊழல், கொள்ளை தான். கிராவல் ஊழலில் சிக்கி உள்ள அமைச்சர் பொன்முடி, அமைச்சர் பதவிக்கு அருகதை இல்லாதவர். 294 பொறியியல் கல்லூரியில் 980 ஆசிரியர்கள், ஆதார் அட்டையைப் போலியாக வடிவமைத்து, வழங்கி பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கவனிக்க முடியாத திறமையற்ற, திராணியற்ற அமைச்சர் பொன்முடி போன்ற ஊழல் பேர்வழிகள், மொழிக்கொள்கையை பற்றி முடிவு செய்ய இவர்கள் யார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தார். ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் பள்ளியில் சமச்சீர் கல்வி இல்லை. அப்படி என்றால், நீங்களே, கருணாநிதியை, மதிக்கவில்லை என்று அர்த்தம். மொழிக்கொள்கையில் பிடிவாதம் பிடித்தால், திமுக எம்பி டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் நடத்தும் அனைத்து சி.பி.எஸ்.சி. பள்ளி வாசலிலும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டும். இல்லை என்றால் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் ஹெச்.ராஜாதெரிவித்துள்ளார்.