புதுச்சேரியில் கடற்கரை, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற துணைநிலை ஆளுநர் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக வலியறுத்தி உள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மின் கட்டண உயர்வு சம்பந்தமாக பல்வேறு அரசியல் கட்சிகள் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வரும் வேலையில், இது சம்பந்தமாக அரசின் சார்பில் மின்துறை அமைச்சர் பதில் அளிக்க முன்வராதது மக்களை அவமதிக்கும் செயலாகும். மின் கட்டணத்தை அரசு உயர்த்தாமல், இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையமே நேரடியாக உயர்த்தியதாகவும், இந்த கட்டண உயர்வுக்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது என்றும் சட்டப்பரவைத் தலைவர் கூறியுள்ளார்.
மின் கட்டண உயர்வு சம்பந்தமாக புதுச்சேரி அரசு 1.12.2023-ம் தேதி ஒரு கட்டண விவரத்தோடு இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பம் சமர்ப்பித்தது. அந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி, 12.6.2024-ல் அரசின் விண்ணப்பத்துக்கு அனுமதி கொடுக்கிறது. அதன்படி, 16.62024-ல் இருந்து மின் கட்டணத்தை அரசு உயர்த்துகிறது. மின் கட்டணத்தை உயர்த்த அரசுதான் அனுமதி கேட்கிறது. எனவே, மின் கட்டண உயர்வுக்கு அரசுதான் பொறுப்பு. நேரடியாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியதாக சட்டப்பேரவைத் தலைவர் கூறுவது தவறான ஒன்று. தமிழகத்தை விட புதுச்சேரியில் மின் கட்டணம் குறைவு என்பது போல, எதையும் தெரிந்து கொள்ளாமல் கூறக்கூடாது.
மின் கட்டண உயர்வு குறித்து அதிமுகவிடம் நேரடியாக விவாதிக்க சட்டப்பேரவைத் தலைவர் தயாரா? செப்.1-ம் தேதி ரேஷன் கடையை திறந்து அரிசி போடுவோம் என்று சட்டப்பேரவைத் தலைவர் கூறினார். ஆனால் ரேஷன் கடை எங்கு திறந்துள்ளது என்று தேடிக் கொண்டிருக்கிறேன். உயர்ந்த பதவியில் இருக்கும் சட்டப்பேரவைத் தலைவர் மக்களை திசை திருப்பும் வகையில் தகவலை சொல்லக்கூடாது. புதுச்சேரி முழுவதும் கடற்கரை மேலாண்மை விதிகளை பல்வேறு தனியார் ஓட்டல் உரிமையாளர்கள் தொடர்ந்து மீறி வருகின்றனர்.
உப்பளத்தில் பாண்டி மெரினா கடற்கரை மற்றும் சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் டெண்டர் எடுத்தவர்கள் தனிப்பட்ட முறையில் கூடுதலாக கடைகளை கட்டி வாடகைக்கு விடுகிறார்கள். மேலும் மது குடிப்பது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுகுறித்து முன்னாள் முதல்வர் நாராயணயசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பாஜக அமைச்சர் துணையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு அரசு பதில் கூற வேண்டும். மணவெளி தொகுதி முழுவதும், நோணாங்குப்பம் கடற்கரை முழுவதும் தனியார் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், பாஜக என ஆளாளுக்கு ஓட்டல் உரிமையாளர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது. இந்த ஆக்கிரமிப்பு சம்பந்தமாக துணைநிலை ஆளுநர் உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக கடற்கரை பகுதி, ஆற்றங்கரையோர பகுதி, நீரோடை பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற துணைநிலை ஆளுநர் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆட்சியில் இருப்பவர்கள் திட்டமிட்டு விஞ்ஞான ரீதியில் முறைகேடுகளை செய்து வருகிறார்கள். இதையெல்லாம் ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள். இன்னும் 3 நாட்களுக்குள் இதனை துணைநிலை ஆளுநரிடம் புகாராக சமர்ப்பிப்போம். அவர் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்பழகன் கூறினார்.