மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் சத்திரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததைக் கண்டித்து எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி தலைவர்கள் இன்று பேரணி நடத்தினர்.
வரலாற்று சிறப்பு மிக்க ஹுதாத்மா சவுக்கில் இருந்து கேட்வே ஆஃப் இந்தியா வரை சென்ற பேரணியில் எதிர்க்கட்சித் தொண்டர்கள் அரசைக் கண்டித்து கைகளில் காலணிகளுடன் சென்றனர். சிலை உடைந்ததற்கு மத்திய மாநில அரசுகளை எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். கூட்டத்தில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, “பிரதமர் மன்னிப்பு கேட்டது ஆணவத்துக்கு விழுந்த அடி” என்று சாடினார். சரத் பவார், “இது ஊழலுக்கான ஓர் உதாரணம்” என்று குற்றம்சாட்டினார்.
சிந்துதுர்க் மாவட்டம், மால்வான் தாலுகாவில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் 17-ஆம் நூற்றாண்டின் மராட்டிய பேரரசர் சிவாஜியின் 35 அடி சிலை பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு டிசம்பர் 4, கடற்படை தினத்தன்று திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சிலை ஆகஸ்ட் 26ம் தேதி பிற்பகலில் இடிந்து விழுந்தது. பலத்த காற்றினால் இந்தச் சிலை இடிந்து விழுந்ததாக மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதியினர் அரசுக்கு எதிராக இன்று பேரணி நடத்தினர்.
இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா (யுடிபி) தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா படோல் மற்றும் கட்சியின் மும்பை தலைவர் வர்ஷா கெய்க்வாட் உள்ளிட்டோர் சம்யுக்த மகாராஷ்டிரா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து கேட் வே ஆஃப் இந்தியாவில் உள்ள சிவாஜி சிலை வரை சென்ற பேரணிக்கு ‘சப்பல் ஜோட் மாரோ யாத்ரா” (காலணிகளால் அடிக்கும் யாத்திரை) என்று பெயரிடப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித் தொண்டர்கள் கைகளில் காலணிகளுடன் கலந்து கொண்டனர்.
கேட்வே ஆஃப் இந்தியாவில் நடந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசுகையில், “நீங்கள் அந்த மன்னிப்பில் (பிரதமர் மேடியின்) இருந்த ஆணவத்தை கவனித்தீர்களா? அது ஆணவத்தால் அடிக்கப்பட்டது. அப்போது ஒரு துணை முதல்வர் சிரித்துக் கொண்டிருந்தார். கீர்த்தி மிகுந்த வீரம் நிறைந்த மன்னர் அவமதிக்கப்பட்டிருப்பதை மகாராஷ்டிரா மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். ராமர் கோயில் மற்றும் புதிய நாடாளுமன்றத்தின் கூரைகள் ஒழுகுவது மோடியின் பொய்யான உத்தரவாதத்துக்கு உதாரணங்கள்.
பிரதமர் எதற்காக மன்னிப்புக் கேட்டார்? எட்டு மாதங்களுக்கு முன்பு அவர் அந்த சிலையைத் திறந்து வைத்ததற்காகவா? அதில் நடந்துள்ள ஊழலுக்காகவா? சிவாஜி மகாராஜாவை அவமதித்த சக்திகளை எம்விஏ கூட்டணி ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும். அந்தச் சிலை உடைந்தது மகாராஷ்டிராவின் ஆன்மாவுக்கான அவமதிப்பு” என்று தாக்கரே பேசினார்.
ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பேசிய சரத் பவார், “சிந்துதுர்க்-ல் இருந்த சிவாஜி மகாராஜாவின் சிலை இடிந்தது ஊழலுக்கான உதாரணம். இது அனைத்து சிவ பக்தர்களுக்கான (வீரசிவாசியை பின்பற்றுபவர்கள்) அவமதிப்பு” என்றார். அதேபோல் பேரரசரின் வம்சாவளியைச் சேர்ந்தவரும், கோல்ஹாபூர் காங்கிரஸ் எம்.பி.யுமான சாஹு சத்ரபதி, “என்ன விலை கொடுத்தாகிலும் பேரரசரின் மரியாதை காப்பாற்றப்பட வேண்டும்” என்றார்.