பட்டம், பட்டயப்படிப்பு மாணவர்களின் பணித்திறன் பயிற்சிகள் : புதிய தளத்தில் பதிவு செய்ய கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

பட்டம், பட்டயப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு சிறந்த பணித்திறன் பயிற்சிகள், பணி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மத்திய அரசின் தேசிய தொழிற்பயிற்சித் திட்டத்தின் கீழ் (என்ஏடிஎஸ்) பட்டம், டிப்ளமோ, தொழிற்கல்வி மாணவர்களுக்கு சிறந்த பணி வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரையிலான பணித்திறன் பயிற்சி (அப்ரண்டிஸ்) வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இந்தத் திட்டத்துக்காக என்ஏடிஎஸ் 2.0 போர்டல் தளம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கான பணித்திறன் பயிற்சிக்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படும். இதில், பயிற்சி தொடர்பான செயல்பாடுகள், விண்ணப்பப் பதிவு, பணி வாய்ப்புகள் தொடர்பான விளம்பரங்கள், ஒப்பந்தங்களை மேற்கொள்வது, சான்றிதழ் வழங்குவது, உதவித் தொகை வழங்குதல் என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய தளம் உயர்கல்வி நிறுவனங்களின் பயிலும் மாணவர்களையும் பணி வழங்குவோரையும் இணைக்கும் பாலமாக இருக்கும். சிறந்த முறையில் பணித்திறன் பயிற்சிகளை வழங்கவும், அதன் மூலம் பணி வாய்ப்புகளைப் பெறவும் உதவும். எனவே அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் என்ஏடிஎஸ் 2.0 என்ற புதிய தளத்தில் தங்களை பதிவு செய்துகொண்டு, தங்களது மாணவர்களுக்கான பணித்திறன் பயிற்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.