புதுச்சேரி தலைமை செயலகத்துடன் கூடிய புதிய சட்டப்பேரவை கட்டும் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளதாக பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் தலைமைச் செயலகத்துடன் கூடிய புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். புதிய சட்டப்பேரவை வளாகமானது ரூ.576 கோடியில், தட்டஞ்சாவடி பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
அதேபோல் கடந்த 2022-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், குரூப்- பி நான் கெசடட் பணியிடங்களான அசிஸ்டென்ட், வேளாண் அதிகாரி, மோட்டார் வாகன துணை ஆய்வாளர் உள்ளிட்ட 180 பதவிகளில் எம்பிசி பிரிவுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கோப்புக்கும் துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த இரண்டு கோப்புகளும் ஒன்றறை ஆண்டுகளாக கிடப்பில் இருந்தன. இதற்கு ஒப்புதல் தந்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதிய துணைநிலை ஆளுநர் அரசுடன், இணக்கமாக இருப்பதால், இனி அரசுப் பணிகள் அனைத்தும் தொய்வின்றி நடக்கும் என நம்புகிறோம். புதுச்சேரி மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது அது முதல்வரின் பரிசீலனையில் உள்ளது. துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெற்று விரைவில் முதல்வர் ரங்கசாமி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து இதுகுறித்து நேரில் வலியுறுத்த உள்ளார். இந்த ஆண்டிலேயே மாநில அந்தஸ்து பெறுவதற்கான வழிவகைகள் ஆராயப்படும்.
அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஒரு அங்குலம் கூட யாரும் அபகரிப்பு செய்ய முடியாது. அது நானாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அரசின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய அரசு அனுமதிக்காது. மணவெளி தொகுதி முன்னாள் எம்எல்ஏ சம்பந்தப்பட்ட நபரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் நாடகமாடி வருகிறார். அவர்தான் நீர்நிலை இடத்தை ஆக்கிரமித்து ஹோட்டல் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
அரசின் திட்டங்களை நான் தன்னிச்சையாக அறிவிக்கவில்லை. முதல்வர் அறிவித்ததைத்தான் நான் மீண்டும் தெரிவிக்கிறேன். முதல்வர் தன்னை விளம்பரம் செய்து கொள்ளமாட்டார், எனவே அரசின் நடவடிக்கைகள், திட்டங்கள் மக்களுக்கு தெரியவேண்டும். அதன் அடிப்படையில் முதல்வர் தெரிவித்த திட்டங்களை நான் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சியின் வாயிலாக தெரிவிக்கிறேன்.
முதல்வரை மீறி திட்டங்களை அறிவிப்பதாக மற்றவர்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. மின் கட்டண உயர்வைப் பொறுத்தவரை இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் கட்டணத்தை நிர்ணயம் செய்கிறது. இருப்பினும் மின்கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை முதல்வர் எடுத்து வருகிறார்.
மின்துறையானது கடந்த காலங்களில் நஷ்டத்தில் இருந்து வந்தது. இந்த ஆண்டு ரூ.25 கோடி லாபம் ஈட்டி உள்ளது. அடுத்த ஆண்டு ரூ.50 கோடி அளவுக்கு லாபம் ஈட்டும் வகையில் திட்டமிட்டு மின்துறை செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியை பொறுத்தவரை மின்துறை ஒரு நிலைப்பாடும், இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேறொரு நிலைப்பாட்டையும் கொண்டிருக்கிறது.
இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறுவதை, அப்படியே ஏற்றிருந்தால் மின்கட்டணம் தற்போது உள்ளதை விட கூடுதலாக வந்திருக்கும். தமிழகத்தை விட புதுச்சேரியில் மின் கட்டணம் குறைவாகவே இருக்கிறது. புதுச்சேரியில் அனைத்து வீடுகளிலும் ஏசி உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் அப்படி இல்லை, கூடுதல் மின்சாரம் பயன்படுத்துவதால் யூனிட்டும் அதிகமாகிறது. அதற்கேற்ப மின்சார கட்டணம் வருகிறது. தமிழகத்தில் இன்னமும் மின்சாரம் கிடைக்காத கிராமங்கள் இருக்கின்றன. முதல்வரின் தனி செயலருடன் அரசு கொறடா மோதல் என்பது முதல்வர் சம்பந்தப்பட்ட விஷயம், இதை அவரிடம் தான் கேட்க வேண்டும். தலைமைச் செயலர், செயலர்கள் , துணை நிலை ஆளுநர், முதல்வர் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை இனி விரைவாக செய்ய முடியும்.
கடந்த காலங்களில் அப்படி இல்லை துணை நிலை ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர் என்ற மூன்று அதிகார மையங்கள் தனித்தனியாக இருந்தன. தற்போது அனைத்து நிர்வாக மையங்களும் ஒன்றிணைந்து ஒரே அரசாக செயல்படுகிறது. புதிய துணைநிலை ஆளுநர் இணக்கமாக செயல்படுவதன் காரணமாக, நல்ல நிர்வாகம் நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கேற்ப இன்றைக்கு நேரடி பணப்பரிமாற்றம் ரத்து செய்யப்பட்டு, இலவச அரிசிக்கான டெண்டர் விடப்பட்டு ரேஷன் கடைகளை திறக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று பேரவைத் தலைவர் செல்வம் கூறினார்.