பட்டினப்பாக்கத்தில் மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் ரவுடி மாட்டு ராஜாவை பெங்களூருவில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இவரிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாகவும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் ராஜா என்கிற மாட்டு ராஜா (42). இவர் மீது கொலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் மாமூல் வசூல் கேட்டு மிரட்டிய வழக்கில் போலீஸார் இவரை தேடி வந்தனர். இந்நிலையில், பெங்களூருவில் தனிப்படை போலீஸார் இன்று மாட்டு ராஜாவை கைது செய்தனர். இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிக்குண்டு சப்ளை செய்ததாக போலீஸாரால் தேடப்பட்டு வரும் ரவுடி புதூர் அப்புவின் நெருங்கிய நண்பர் ஆவர்.
அந்தவகையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? , புதூர் அப்பு எங்கே இருக்கிறார்? என்பது குறித்தும், பல்வேறு கோணத்தில் போலீஸார் இவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ரவுடி மாட்டு ராஜாவையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ரவுடி மாட்டு ராஜா தனது நண்பரான அப்புவின் பெயரை, தனது கையில் பச்சை குத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.