மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஹரியாணா மாநிலம் ஷம்பு எல்லையில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில் இன்று கலந்து கொண்டு தனது ஆதரவினைத் தெரிவித்தார். அப்போது ‘உங்கள் மகள் உங்களுடன் இருக்கிறேன்’என்று தெரிவித்தார்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா எல்லையான ஷம்புவில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அதன் 200-வது நாளில் பெரும் திரளாக கூடினர். வினேஷ் போகத்தும் அவர்களுடன் இணைந்து தனது ஆதரவினைத் தெரிவித்தார். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியை நோக்கிச் செல்லும் போது அதிகாரிகள் ஷம்பு எல்லையில் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 13ம் தேதி முதல் விவசாயிகள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட வினேஷ் போகத்துக்கு மாலை அணிவித்து விவசாயிகள் வரவேற்பு அளித்தனர். ஷம்பு எல்லையில் உரையாற்றிய வினேஷ் போகத், “உங்களுடைய போராட்டம் 200 நாளை நிறைவு செய்கிறது. உங்கள் நீதிக்காக, உரிமைக்காக நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். அவைகள் உங்களுக்கு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். உங்கள் மகள் உங்களுடன் இருக்கிறாள் என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
அதேபோல் நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள், ஒவ்வொரு முறையும் நாங்கள் எங்கள் குரல்களை உயர்த்துவது அரசியலுக்காக இல்லை என்பது அரசுக்கு வலியுறுத்துகிறேன். விவசாயிகளின் கோரிக்கை சட்டவிரோதமானது இல்லை. அரசு அவைகளை காதுகொடுத்து கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் நீதிக்கான போராட்டத்தில் விவசாயிகளை ஆதரிப்பதே எனது முதன்மையான நோக்கம் என்று வலியுறுத்தினார்.
போராட்டம் குறித்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சர்வான் சிங் பந்தர் கூறுகையில், “போராட்டம் அமைதியான முறையில் அதேநேரத்தில் தீவிரமாகவும் நடந்து வருகிறது. எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு எங்களின் உறுதியை சோதிக்கிறது. காற்று, மழை, குளிர் அனைத்தையும் மீறி நாங்கள் 200 நாட்கள் அமைதியான முறையில் இங்கே போராடி வருகிறோம்.
எங்களுக்கு இதுமிகப் பெரிய வெற்றி. ஆகவே இந்த தருணத்தில் இங்குள்ள விவசாயிகளை ஒன்று கூட நாங்கள் அழைத்திருந்தோம். அவளும் (வினேஷ் போகத்) இங்கே வந்திருந்தாள். நாங்கள் அவளை வாழ்த்தினோம். விவசாயிகளின் மகள் விவசாயிகளுடன் நிற்பாள்.” என்று தெரிவித்தார்.
அதேபோல், பாலிவுட் நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத்க்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். விவசாயிகளுக்கு எதிரான அவரது கருத்துக்கள் விவசாயிகளிட்டத்தில் சர்ச்சையையும், எதிர்ப்பினையும் கிளப்பியுள்ள நிலையில், கங்கனாவுக்கு எதிராக பாஜக உறுதியான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.