இந்தியாவின் யுபிஐ மேலும் பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது : ரிசர்வ் வங்கி ஆளுநர்

ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பமான யுபிஐ, மேலும் பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ஐந்து நாள் பயணமாக ஒடிசா வந்துள்ள சக்தி காந்த தாஸ், தலைநகர் புவனேஸ்வரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர், “QR குறியீடுகள் மற்றும் விரைவான கட்டண முறைகளின் இணைப்புகள் மூலம் யுபிஐ ஏற்கனவே பல நாடுகளில் உள்ளது. மேலும் பல நாடுகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இது உலக அளவில் மேலும் வளரும். எதிர்காலத்தில் சர்வதேசமயமாக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 28, 2024) மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சக்தி காந்த தாஸ், “பூடான், நேபாளம், இலங்கை, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ், நமீபியா, பெரு, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் யுபிஐ நெட்வொர்க் மற்றம் ரூபே கார்டுகளை ஏற்றுக்கொண்டுள்ளன. இது இந்தியாவின் முன்முயற்சிகளை உலகம் ஏற்றுக்கொள்வதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ, நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், யுபிஐ சேவையை மேம்படுத்துவம் வகையில், புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், யுபிஐ சேவையில் குரல் வழி பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இனி வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு தங்கள் மொபைல் எண் அல்லது யுபிஐ எண்ணை தட்டச்சு செய்ய தேவையில்லை. குரல் மூலமாகவே அவற்றை உள்ளீடு செய்து பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.