ராமநாதபுரத்தில் தலைக்காய சிகிச்சைப் பிரிவு கோரி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்க வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கக் கோரி ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு மாவட்டச் செயலாளரும், எம்பி-யுமான தர்மர் தலைமை வகித்தார்.

அப்போது பேசிய தர்மர் கூறியதாவது, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.154 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு, தலைக்காய சிகிச்சைப் பிரிவு, உயிர்காக்கும் கருவிகள் இல்லாமல் உள்ளது. இதனால் விபத்துகளில் தலைக் காயம் அடைபவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். அப்படி அனுப்பப்படுவோரில் பலர் செல்லும் வழியிலேயே உயிரிழக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம், திருப்புல்லாணி, தேவிபட்டினம், திருஉத்தரகோசமங்கை, ஏர்வாடி தர்ஹா போன்ற ஆன்மிக புண்ணிய தலங்களுக்கு நூற்றுக் கணக்கான வாகனங்களில் யாத்ரீகர்கள் வந்து செல்கின்றனர். அப்படி வருபவர்கள் விபத்தில் சிக்கி தலைக் காயம் அடைந்தால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க, அறுவைச் சிகிச்சை செய்ய தலைக் காய சிகிச்சைப் பிரிவு இல்லை.

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால் இந்த சிகிச்சைக்கு லட்சக் கணக்கில் செலவிட வேண்டும். ஏழை, எளிய மக்களால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாது. இந்த மருத்துவமனையில் திமுக அரசு போதிய மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களை நியமிக்காமல் உள்ளது. எனவே, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்க வேண்டும். போதிய உயிர்காக்கும் கருவிகளை அமைப்பதுடன் போதிய மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மர் கூறினார்.

மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் நந்திவர்மன் (ஆர்.எஸ்.மங்கலம்), சீனிமாரி (மண்டபம்), முத்து முருகன் (ராமநாதபுரம்), ராமநாதபுரம் நகர் செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டட்ட பெண்கள் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.