தேனாம்பேட்டை உள்ளிட்ட நான்கு மண்டலங்களில் 26 கோடியில் 16 இடங்களில் நடைப்பயிற்சி பாதைகள் அமைக்க சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், ஆணையர் ஜெ.குமரகுருபரன், துணை மேயர் மு.மகேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு: மாநகராட்சியின் 289 குப்பை அகற்றும் வாகனங்களில் ரூ.1.31 கோடியில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, ஜிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் 3 ஆண்டுகளுக்கு கண்காணிக்க மன்றத்தில் அனுமதி வழங்கப்படுகிறது.
மாநகராட்சியின் 4, 5, 9, 12 ஆகிய மண்டலங்களில் 16 இடங்களில் ரூ. 26.60 கோடியில் நடைபயிற்சி பாதைகள் அமைக்க தயாரிக்கப்பட்ட திட்டமதிப்பீட்டுக்கு மன்றத்தில் அனுமதி வழங்கப்படுகிறது. கொளத்தூர் புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தாலுகா அலுவலகமானது மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் 2 ஆண்டுகள் வாடகை அடிப்படையில் வழங்க இந்த மன்றம் அனுமதிக்கிறது.
வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ரூ. 176 கோடியில் பாலம் கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட மதிப்பு ரூ.195 கோடியாக உயர்த்தப்பட்டதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் அறிவியல் பூங்கா ரூ.5.75 கோடியில் அமைக்க தயாரிக்கப்பட்ட திட்டமதிப்புக்கு மன்றம் அனுமதிக்கிறது.
அண்ணா நகர் கிழக்கு 2-வது முதன்மைச் சாலைக்கு தமிழறிஞர் அவ்வை நடராஜன் முதன்மை சாலை என பெயர் சூட்ட அரசாணை பெறப்பட்ட நிலையில் அதற்கு மன்றம் அனுமதி வழங்கிறது. கண்ணப்பர் திடல் பகுதிகளில் வசித்து வரும் அடையாளம் காணப்பட்ட 114 குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு பயனாளி பங்குத்தொகை செலுத்த வேண்டும். அந்த பங்குத் தொகையில் 3-ல் ஒரு பங்கை பயனாளியும், 2 பங்கை மாநகராட்சி நிர்வாகம் செலுத்த மன்றம் அனுமதிக்கிறது.
சென்னை மாநகர பகுதியில் ரூ.9.45 கோடி செலவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு செய்யும் திட்டத்துக்கும் இந்த மன்றம் அனுமதிக்கிறது. சென்னை மாநகரில் ரூ.8.46 கோடியில் 81 இடங்களில் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்க இந்த மன்றம் ஒப்புதல் அளிக்கிறது. என்பது உள்ளிட்ட 54 தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.