“உலகப் பொருளாதாரம் எனும் ரயிலில் இந்தியா ஒரு பெட்டி அல்ல; மிகப் பெரிய இஞ்சின்களில் ஒன்று” என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 47-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி, “உலக அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இருந்த போதிலும், வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி இந்தியா நம்பிக்கையுடன் பயணிக்கிறது. புதிய இந்தியாவின் தொடர்ச்சியான எழுச்சி, முழுமையான உறுதியுடன் உள்ளது. அமிர்த காலத்தில் உள்ள இந்தியா, உலகளவில் ஒப்பிடமுடியாத மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், ஒப்பீட்டளவில் இலகுவான கடன் சுமைகளைக் கொண்டு முன்னேறி வருகிறது.
2027-ம் ஆண்டில் இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி இயந்திரங்களில் ஒன்றாக திகழும். ஜப்பான் மற்றும் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க உள்ளது. இது நமது சுதந்திரத்தின் 80-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான சிறந்த வழியாக இருக்கும். இந்தியா, அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், அதிகாரம் பெற்ற மக்கள் தொகை, வளர்ந்து வரும் பொருளாதார சக்தி மற்றும் சமாதானத்துக்கான பழமையான ஆதரவு ஆகியவற்றுடன், உலகை சிறப்பாக மாற்றுவதில் நமது தேசம் முக்கிய பங்கு வகிக்கும்.
பங்குதாரர்கள்தான் ரிலையன்ஸின் முதுகெலும்பு என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் நம்பினார். உங்கள் நிறுவனம் வலிமையிலிருந்து மேலும் வலிமைக்கு செல்லும்போது, நீங்கள் கணிசமான வெகுமதிக்கு தகுதியானவர் என்றும் அவர் உறுதியாக நம்பினார். எங்களின் அனைத்து வணிகங்களின் வலுவான செயல்திறன் மற்றும் பிரகாசமான எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில், உங்களுடன் சில நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இன்று மதியம் 1.45 மணியளவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவது குறித்து பரிசீலிக்க செப்டம்பர் 5 ஆம் தேதி இயக்குநர்கள் குழு கூடும் என்று பங்குச் சந்தைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரிலையன்ஸ் வளர்ச்சியடையும் போது, எங்கள் பங்குதாரர்களுக்கு நாங்கள் வெகுமதி அளிக்கிறோம். மேலும் எங்கள் பங்குதாரர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் போது, ரிலையன்ஸ் வேகமாக வளர்ந்து அதிக மதிப்பை உருவாக்குகிறது. இந்த நல்லொழுக்க சுழற்சி உங்கள் நிறுவனத்தின் நிரந்தர முன்னேற்றத்திற்கு உத்தரவாதமாக உள்ளது.
நமது தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதற்கு அன்புடன் வாழ்த்துவோம். 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஸ்திரத்தன்மை, தொடர்ச்சி மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்துக்கான ஓர் அற்புதமான வெற்றியை உருவாக்கியுள்ளது. இது உலகளவில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியுள்ளது. மேலும் இது நமது பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை நன்றாகக் காட்டுகிறது. உலகப் பொருளாதாரம் எனும் ரயிலில் இந்தியா ஒரு பெட்டி அல்ல; மிகப் பெரிய இஞ்சின்களில் ஒன்று” என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.