பெங்களுருவில் அண்மையில் நடைபெற்ற Job 60 Plus என்ற மூத்த குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் ஆர்வத்துடன் 60 வயதை கடந்தவர்கள் பலர் பங்கேற்றனர். ஓய்வுக்கு பிறகு ஆக்டிவாக இருக்க, நிதி ரீதியாக யாரையும் சாராமல் இருக்கும் வகையில் இதில் பங்கேற்றவர்கள் பலரும் தெரிவித்திருந்தனர்.
பெங்களூருவின் சாந்தி நகரில் அமைந்துள்ள புனித ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 30 நிறுவனங்கள் பங்கேற்றன. பொறியாளர், தொழில்நுட்ப வல்லுநர், சில்லறை வணிக பிரதிநிதிகள், அட்மின்கள் என பல்வேறு வேலைகளுக்கு இதில் ஆட் தேர்வு நடந்தது. நிகழ்விடத்தில் நேர்காணல் நடத்தப்பட்டு, தகுதியான நபர்களுக்கு கையோடு ஆஃபர் லெட்டரும் வழங்கப்பட்டுள்ளது.
“நான் சில காலத்துக்கு முன்பு ஓய்வு பெற்றேன். ஆனால், வேலை செய்ய வேண்டுமென்ற ஆர்வமும், ஆற்றலும் என்னிடம் உள்ளது. வீட்டில் இருப்பதை விட கல்விக் கூடங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் இருப்பது நல்ல அனுபவமாக இருக்கும்” என்கிறார் 72 வயதான டெரெக் ஹாமில்டன். கல்வி சார்ந்த துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அவர் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றார். அவரது எண்ணத்தையே இதில் பங்கேற்ற பலரும் தெரிவித்தனர்.
நைட்டிங்கேல்ஸ் மருத்துவ அறக்கட்டளையின் முன்முயற்சியாக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதிகரித்து வரும் செலவினம், போதுமான ஓய்வூதியம் இல்லாதது, நிதி ஆதாரத்துக்காக பிறரை முதியவர்கள் சார்ந்து இருக்க கூடாது என்ற நோக்கத்தில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.