பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் அடுத்த வாரம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால், தங்கள் அரசு நிறைவேற்றி அனுப்பும் இந்த மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி தர மாட்டார் என்பது தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி நிறுவன தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்க சட்டப்பேரவை அடுத்த வாரம் கூட்டப்படும். அப்போது, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனையை உறுதி செய்வதற்கான மசோதாவை நிறைவேற்றுவோம். இந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படும். அந்த மசோதாவுக்கு அவர் ஒப்புதல் தரவில்லை என்றால், நாங்கள் ராஜ்பவன் வெளியே உட்காருவோம். இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், பொறுப்புக் கூறுவதை இந்த முறை ஆளுநர் தவிர்க்க முடியாது” என்று தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமை வழக்குகள் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு 7 நாட்களுக்குள் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் எனது அரசு விரும்புகிறது என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.
மேலும் அவர், “நேற்று (ஆக. 27) தலைமைச் செயலகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்ற போராட்டக்காரர்களை எதிர்கொள்வதில் மாநில காவல்துறையின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. அதற்காக நான் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். அவர்கள் தங்கள் ரத்தத்தை கொடுத்தார்கள். ஆனால் பாஜகவின் சதி வெற்றிபெறும் வகையில் ஒரு உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை” என்று தெரிவித்தார்.
இதனிடையே, பாஜக அழைப்பு விடுத்துள்ள 12 மணி நேர பந்த் காரணமாக மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை பகுதியாக முடங்கியுள்ளது. நாடியாவில் திரிணமூல் – பாஜக தொண்டர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. ஆங்காங்கே ரயில் மறியல், சாலை மறியல், கடைகளை மூட வற்புறுத்தல் என பாஜகவினர் பந்த்தை முழு வீச்சில் அமல்படுத்த முயற்சித்து வருகின்றனர்.