தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கூலி வேலைக்குச் சென்ற 3 பெண்கள் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 விவசாய பெண் கூலி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பெண் கூலி தொழிலாளர்கள் சுரண்டை அருகே உள்ள வாடியூர் கிராமத்துக்கு விவசாய வேலைக்காக இன்று காலையில் சரக்கு ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றனர். கீழ் சுரண்டை பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் (25) என்பவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார்.

சுரண்டை அருகே வாடியூர் கிராமத்தில் வேகமாகச் சென்ற ஆட்டோ மேல்புறம் வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஜானகி (52), வள்ளியம்மாள் (60), பிச்சம்மாள் (60) ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், ஆட்டோ ஓட்டுநர் தேவேந்திரன் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் பற்றி தகவலறிந்த சுரண்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

உயிரிழந்த பெண் கூலி தொழிலாளர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சுரண்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அன்றாட வேலைக்காக கூலித்தொழிலாளர்கள் விவசாய வேலைக்கு செல்லும்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.