அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத் துறை தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், எம்பியுமான ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகளில் ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகளின்படி, ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ.908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.
முன்னதாக, 2020-ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகக் கூறி ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத் துறை முடக்கியது.
இந்தச் சூழலில் ஜெகத்ரட்சகன் தனது கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில், வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருப்பூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.