தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியை நிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க மத்திய அரசுத் திட்டம் இடுவதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தை மத்திய அரசின் 60% பங்களிப்புடன் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
2024-25ஆம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு 4 தவணைகளில் ரூ.2 ஆயிரத்து 152 கோடியைத் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். இத்திட்டத்திற்கான முதல் தவணையாக ரூ.573 கோடியைக் கடந்த ஜூன் மாதமே மத்திய அரசு வழங்கியிருக்க வேண்டும். மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு நிராகரித்ததால் எஸ்.எஸ்.ஏ திட்டத்துக்கான ரூ.573 கோடி நிதி நிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டின் கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
ஒட்டுமொத்தக் கல்வி நிறுவனங்கள் பிரிவில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டின் 18 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. நாடு முழுவதும் உள்ள 100 சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் தமிழ்நாடு 22 பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ளது.
நாட்டின் சிறந்த 100 கல்லூரிகளில் 37 தமிழ்நாட்டில் உள்ளன. நாட்டின் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் 14 கல்லூரிகள் உள்ளன. உயர்கல்விக்குச் செல்வோரின் விகிதத்தில் நாட்டிலேயே முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
மத்திய அரசின் புள்ளி விவரங்களின்படி தமிழ்நாடு அரசு கல்வித்தரத்தில் மிக உயர்ந்த நிலையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடைசியாகத் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டிற்குப் போதிய நிதியை ஒதுக்கவில்லை. தற்போது கல்விக்காக வழங்க வேண்டிய நிதியையும் நிறுத்தி வைப்பது என்பது ஒட்டுமொத்தமாக மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடை செய்வதற்கான வேலைகளில் மும்முரமாக இயங்கி வருகிறது என்பதனை காட்டுகிறது. உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தொகையினை விடுவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.