கொல்கத்தா பேரணியில் தடுப்புகளை உடைத்த போராட்டக்காரர்கள் : கண்ணீர் புகைகுண்டு வீசி கலைத்த போலீஸார்

மேற்கு வங்கத்தில் இன்று நடந்த மாணவர்கள் பேரணியில் போராட்டக்காரர்கள் போலீஸாரை நோக்கி கற்களை வீசியதாலும், ஹவுரா பாலத்தில் உள்ள தடுப்புகளை உடைத்ததாலும் பரபரப்பு ஏற்பட்டது. தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்றவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டு வீசி, தடிஅடி நடத்தினர்.

ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவரின் கொலைக்குப் பொறுப்பேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக்கோரி மாணவர் அமைப்பு ஒன்று ‘நபன்னா அபிஜான்’ என்ற தலைமைச் செயலகம் நோக்கிச் செல்லும் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. பேரணியில் வன்முறை நடக்க வாய்ப்பு உள்ளது என உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து 6,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டிருந்தனர். தலைமைச் செயலகத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் காவல்துறை தடுப்புகளை மீறி மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்னேற முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேரணி தொடங்குவதற்கு முன்பாக, பெரிய அளவில் வன்முறை ஏற்படுத்தவும், கொலை மற்றும் கொலை முயற்சி சதி செய்ததாகவும் கூறி நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கொல்கத்தா போலீஸார் தெரிவித்திருந்தனர்.

மாநில தலைமைச் செயலகத்துக்கு அருகே 20 நிலைகளில் போலீஸார் இரும்பு மற்றும் அலுமினியத் தடுப்புகளை வைத்திருந்தனர். போராட்டக்காரர்கள் அதன்மீது தாவி ஏற முடியாத வகையில் அதில் எண்ணெய் தடவி வைத்திருந்தனர். போராட்டக்காரர்களின் நடமாட்டங்களை கண்காணிக்க ட்ரோன்கள், இயந்திர காவலர்கள் பயன்படுத்தப்பட்டன. கலவரத்தடுப்பு வாகனமான வஜ்ராவும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

பச்சிம்பங்கா சத்ரா சமாஜ் எனப்படும் ஒரு பதிவு செய்யப்படாத புதிய மாணவர் அமைப்பு இந்தப் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆர்.ஜி.கர் மருத்துவனையில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று அந்த அமைப்புக் கோரியது. இதனிடையே மருத்துவரின் கொலைக்கு நீதிகேட்டு ஆகஸ்ட் 10 முதல் போராடி வரும் மருத்துவர்களும், இடதுசாரி மாணவர் அமைப்புகளும் இந்த நபன்னா அபிஜானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இந்த பேரணிக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளதாகவும், போரட்டத்தின் போது வன்முறையைத் தூண்ட திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக, இந்தப் பேரணி பாரதிய ஜனதா கட்சியால் ஏற்பாடு செய்யப்படவில்லை, என்றாலும் பேரணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

முன்னாதாக, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை 2-ம் ஆண்டு பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு உள்ளார்.