தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவப் படத்தை கிழித்து தீயிட்டுக் கொளுத்தி புதுச்சேரி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
அண்ணாமலையை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தினார். அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசியதாகக் குறிப்பிட்டு புதுச்சேரி அதிமுக தலைமை கழகம் முன்பு மாநிலச் செயலர் அன்பழகன் தலைமையில் இன்று போராட்டம் நடந்தது.
அப்போது அதிமுகவினர் அண்ணாமலையின் உருவப்படத்தை கிழித்து தீயிட்டுக் கொளுத்தினர். அண்ணாமலைக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். அதைத் தொடர்ந்து அதிமுக மாநிலச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், “அதிமுக பொதுச்செயலாளரைப் பற்றி அவதூறாக பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் கிடையாது. அண்ணாமலையின் பேச்சு தொடர்ந்து சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.
மறைந்த ஒப்பற்றத் தலைவர்களைப் பற்றியும் தற்போதைய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பற்றியும் தரம் தாழ்ந்து பேசுவதையே அண்ணாமலை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். ஒவ்வொரு முறையும் திட்டமிட்டு எதையாவது பேசி கலவரத்தைத் தூண்டும் இவரை குண்டா தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என்றார்.