திருநல்லூரில் பழுதடைந்த ஊராட்சி மன்றக் கட்டிடத்தை அதே இடத்தில் கட்ட வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் திருநல்லூரில் பழுதடைந்த ஊராட்சி மன்றக் கட்டிடத்தை அதே இடத்தில் கட்ட நடவடிகை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே.சண்முகம், ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.தேவராஜன் ஆகியோருடன் திருநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் கு.மணிமுத்து இன்று மாவட்ட ஆட்சியர் மு.அருணாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் திருநல்லூர் ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டப்பட்டு 35 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் மிகவும் பழுதடைந்துள்ளது. இக்கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் கட்டுவதற்கு ஊராட்சி மன்ற நிர்வாகமும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதே இடத்தில் கட்டுவதற்கு சில தனி நபர்கள் தங்களில் சுயநலத்துக்காக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையும் அதே இடத்தில் கட்டுவதற்கான உத்தரவிட்டுள்ளது. ஆனால் பொதுமக்களின் கோரிக்கையையும், நீதிமன்ற உத்தரவையும் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கிடப்பில் போட்டு காலதாமதப்படுத்தியது. எனவே, மேற்படி ஊராட்சி மன்றக் கட்டிடத்தை அதே இடத்தில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மு.அருணா அதே இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.