ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி நெஞ்சுலியால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேரை போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர். அதில், திருவேங்கடம் என்பவர், விசாரணையின் போது தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். தொடர்ந்து, போலீஸார் இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு உளவாளியாக செயல்பட்ட ஆட்டோ டிரைவர் திருமலை போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறைக்காவலர்கள் அவரை, உடனடியாக பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமலை, ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர் என்றும் கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.