குற்றாலத்தில் தென்றல் காற்று, சாரல் மழை தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருவதால் அருவிகளில் நீர் வரத்து குறைந்துவிட்டது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. வாட்டி வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் குளித்தனர்.
தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும். மலைப் பகுதியில் பொழியும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். மழைக் காலங்களில் அருவிகளில் நீர் வரத்து ஏற்பட்டாலும் சாரல் சீஸன் காலத்தில் அடிக்கடி பெய்யும் சாரல் மழை, குளிர்ந்த தென்றல் காற்று, ஆர்ப்பரிக்கும் அருவிகள் சுற்றுலாப் பயணிகளை குதூகலப்படுத்தும். இதனால் சாரல் சீஸன் காலத்தில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இந்த ஆண்டு மே மாத இறுதியில் முன்கூட்டியே சாரல் சீஸன் தொடங்கியது. ஜூன், ஜூலை மாதத்தில் சில நாட்கள் தொடர் சாரல் மழையும், சில நாட்கள் மழையின்றி குளிர்ந்த வானிலையும் நிலவியது. 2 மாதங்கள் சாரல் சீஸன் களைகட்டிய நிலையில், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்து வருகிறது.
மலைப் பகுதியில் மட்டும் ஒரு சில நாட்களில் லேசான மழை பெய்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குற்றாலத்திலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. விடுமுறை தினமான இன்று குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆனால் அருவிகளில் குறைவான அளவிலேயே தண்ணீர் விழுந்தது.
கூட்ட நெரிசலை தவிர்க்க சுற்றுலாப் பயணிகளை காவல்துறையினர் வரிசையில் நிற்க வைத்து, சிறு சிறு குழுக்களாக அருவியில் குளிக்க அனுமதித்தனர். வாட்டி வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒரு மணி நேரத்துக்கு மேல் வரிசையில் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் குளித்தனர். சாரல் சீஸன் களையிழந்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.