2026 தேர்தலோடு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி இழுத்து மூடி விடுவார் : டிடிவி தினகரன் தாக்கு

மத்திய அரசை கண்டு திமுக பயப்படுகிறது என்று டிடிவி தினகரன் கூறினார்.

தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மத்திய அரசை கண்டு திமுக பயப்படுகிறது. திமுக எதற்கும் தயாரானவர்கள். தங்களது பதவியை காப்பாற்றி கொள்ள ராஜதந்திரம் என்ற பெயரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கும். தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் நடைபெறுவதற்கு கஞ்சா போன்ற போதைப்பொருள் கலாச்சாரம்தான் காரணம். மாணவர்களையும், இளைஞர்களையும் குறி வைத்து கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது, இதை தடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. இது வருங்கால சமுதாயத்தின் குரல்வலையை நெறிக்கும் செயல்.

அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என எல்லோரும் முயற்சி செய்வது இயற்கை. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தடையாக இருக்கும் வரை இந்த முயற்சி பலிக்காது. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான சிறந்த கூட்டணியாக உள்ளது. மக்கள் விரோத திமுக அரசை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கும். உறுதியாக அதில் வெற்றி பெறுவோம்.

2026 தேர்தலோடு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி இழுத்து மூடிவிடுவார். இரட்டை இலை இருப்பதால்தான் அங்குள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் பொறுமையாக உள்ளனர். சர்க்கரை நோயாளிகள், வயதானவர்களை வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக்கொண்டு, அவர் வீட்டில் இருந்து பிரியாணி சாப்பிடுகிறார். இரட்டை இலை சின்னத்தை அவர் எப்படி கேவலப்படுத்தியும், பலவீனப்படுத்தியும் வருகிறார் என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் பார்க்கிறோம்.

2019 தேர்தலில் பாஜகவுக்கு எதிரான மனோபாவம் தமிழ்நாட்டில் இருந்தது. அது மாறிவருகிறது 2024 தேர்தலில் எங்களுடைய கூட்டணி 2-ம் இடத்திற்கு வந்தது. இதே நிலையில் 2026 தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கான முயற்சிகளை செய்வோம். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று டிடிவி தினகரன் கூறினார்.