திருவரங்குளம் ஒன்றியம் எஸ்.குளவாய்ப்பட்டி. இவ்வூரும் பேரும் பெருமை கூறுவதற்குரிய காரண காரியங்களைக் கொண்டே சிறப்பினை வெளிப்படுத்தக் கூடியனவாக உள்ளன.
குளவாய்ப்பட்டி குளத்தின் உள் வாயில் அமைந்துள்ளதால், குளவாய்ப்பட்டி என்ற பெயரினைப் பெற்றுள்ளது. ஊரின் கிழக்கில் நெடுஞ்சாலையினை ஒட்டி கிழக்குப் பார்த்து சிவன் கோயில் தற்போது அகத்தீஸ்வரர் என்றும், அம்பாள் யோகம்பாள் என்றும் அழைக்கப்படுகிறது. சுமாராக 700ஆண்டுகள் பழமையான இக்கோயிலை புணரமைத்து திருபப்ணி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
இக்கோயிலைப் பொறுத்தவரைக்கும் ஒரு சுற்று மதிலுக்குள் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்ற அமைப்பு நிலையில் உள்ளது. கூரைவரை கற்கள் கட்டுமானத்தை உடையதாகவும், மேலே உள்ள விமானம் செங்கல் சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டதாகவும் உள்ளது. கருவறையில் மூன்று தேவகோட்டங்களும், அர்த்த மண்டபத்தில் இரண்டு தேவ கோட்டங்களும் அமைந்துள்ளன.
கருவறையின் தெற்கு தேவகோட்டத்தினை இணைத்து ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதில் தெட்சிணாமூர்த்தி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். கருவறையின் போதிகை அமைப்பும், வெளிப்புறச் சுவர் அரைத்தூண்கள் அமைப்பும் பிற்கால சோழர்களின் 13-ஆம் நூற்றாண்டு கலைப்பாணியில் உள்ளதால் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்த கோயில் என்று கூறலாம். கருவறையின் உள்ள இறைவன் எவ்வித அடையாளமும் இன்றி தான்தோன்றி ஈசுவராகவும், லிங்கத் திருமேனி ஆவுடையார் இன்றி சதுரக் கல்லின் மேல் வைக்கப்பட்டுள்ளார். கருவறை இரு தள விமானத்தைக் கொண்டுள்ளது.
பரிவாரத் தேவதைகளாக மூலப்பிள்ளையார். வள்ளி-தெய்வானையுடன் மயிலுடன் முருகப்பெருமான் காட்சி தருகிறரர். பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு கல் மண்டபங்கள் அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டுள்ளனர். சூரியன் வெட்ட வெளியில் முன் மண்டபத்தின் கிழக்கில் இரு கைகளிலும் தாமரை மொட்டுகளை ஏற்றியவாறு நிற்கிறார். நந்தி, பலிபீடம் சுவாமி சந்நிதி முன் மண்டபத்தின் வெட்ட வெளியில் உள்ளது. அம்மன் கோயில் முன் மண்டபத்தின் வடக்கில் கருவறை, அர்த்த மண்டபத்தை கொண்டதாகவும், ஜகதி, முப்பட்டைக்குமுதம், பட்டி சுவர். பிரஸ்தரம், பிரஸ்தரத்திற்கு மேல் விமானத்தைக் கொண்டதாகவும், பிரஸ்தரத்தில் யாழிவரியும், ஏகதள விமானமாகவும் காணப்படுகிறது.
தென்புறம் சுவரில் சகாத்தம் 1606-ஆம் ஆண்டு அறந்தாங்கி அரசு ஏகப்பெருமான் தொண்டைமான் என்பவர் வடவெள்ளாற்று சுந்தர பாண்டிய வளநாட்டு தன் அரசினைச் சேர்ந்த பண்ணை நிலத்தினை தானமாக கொடுத்த செய்தியைத் தெரிவிக்கிறது. கல்வெட்டு முழுமையாக இல்லாமல் சிதைந்துள்ளதால் சுந்தரபாண்டிய வளநாடு எந்த ஊர் நிலம் மற்றும் நிலத்தின் அளவு எவ்வளவு என்ற விபரம் அறிய முடியவில்லை. இங்குள்ள கல்வெட்டுகளின் படி குளவாய்ப்பட்டி தென்காஞ்சி நகர் என்னும் இக்கோயில் இறைவன் ஏகாம்பரநாதர் என்றும், அடுத்த கல்வெட்டின் படி அடைவீசுவரமுடையார் என்றும் இறைவி திருக்காமக் கோட்ட நாச்சியார் என்றும் அழைக்கப்பட்டதையும், இக்கோயில் சீறும்-சிறப்பும் பெற்று வளமிகுந்த கோயிலாக விளங்கியதை பல கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகிறது. ஆகவே இப்படி புகழ்பெற்று திகழும் இக்கோயிலை திருப்பணி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பட்ட பொது மக்களிடம் இருந்து உருவாகியுள்ளது.