மேற்பனைக்காடு பள்ளி மேலாண்மைக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அறந்தாங்கி  கல்வி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கீரமங்கலம் அருகே, மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024 – 25ம் ஆண்டு பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. முன்னதாக பள்ளியின் உதவி தலைமையாசிரியர் பரமசிவம் வரவேற்றார்.

கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் கங்கை அரசன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் துரை கோவிந்தராசு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுதா கிருபாநிதி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் இளமதி, ஓய்வு பெற்ற காவல் உதவி கண்காணிப்பாளர் காதர் மைதீன், பள்ளியின் புரவலர் பா.சிதம்பரம், நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் செந்தூர பாண்டியன், ராணியம்மாள் கல்வி  அறக்கட்டளை தலைவர் சர்வம் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம், முக்கியத்துவம் மற்றும் அரசின் கல்வி உதவி திட்டங்கள் குறித்து, தலைமை ஆசிரியர் பெற்றோர்களிடம் கூறினார். மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் கடமைகள், அதிகார வரம்புகள், பொறுப்புகள் குறித்தும் பேசினார். இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக ராகிணி, துணைத்தலைவராக கவிதா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக முகமது மூசா, கவிதா மணி, பல்வேறு மாணவர்களின் பெற்றோர்கள் தேர்வு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக செய்யப்பட்டனர். பள்ளி மேலாண்மை குழு புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் சான்றுகளும் வழங்கப்பட்டன.

கிராம நிர்வாக அலுவல‌ர் பிரபு, கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தார்கள். இறுதியில் ஆசிரியர் நிர்மலா மனுவேல் நன்றி கூறினார்.