திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணி உற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. 4 மணிக்கு வெள்ளிப் பல்லக்கில் கொடிபட்ட வீதி உலா வந்து கோயிலை சேர்ந்தது. மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடந்தன.
கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்புக் கொடிமரத்தில் காலை 5.15 மணிக்கு ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்தது. ஹரிஹர சுப்பிரமணிய சிவாச்சாரியார் கொடியேற்றினார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள், “வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா” என பக்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து கொடிமரத்துக்கு மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கொடிமரம் வண்ண மலர்கள் மற்றும் தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டு, பட்டு சார்த்தப்பட்டது. காலை 6.30 மணிக்கு வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டு கொடிமரத்துக்கு மகா தீபாராதனை நடந்தது.
விழாவில், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் சங்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், சார்பு நீதிமன்ற நீதிபதி செல்லப்பாண்டி, கோயில் அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை தக்கார் கருத்தபாண்டி நாடார், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் 5-ம் திருவிழாவான 28-ம் தேதி குடவருவாயில் தீபாராதனை, 7-ம் திருவிழாவான 30-ம் தேதி அதிகாலை சுவாமி சண்முகர் உருக சட்டசேவை, மாலையில் சுவாமி தங்கசப்பரத்தில் சிவப்பு சார்த்திய கோலத்திலும், 8-ம் திருவிழாவான 31-ம் தேதி அதிகாலை வெள்ளி சப்பரத்தில் வெள்ளைசார்த்திய கோலத்திலும், பகலில் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சார்த்திய கோலத்திலும் வீதி உலா வந்து கோயிலைச் சேருகிறார்.
10-ம் திருவிழாவான வரும் செப்டம்பர் 2-ம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது. 4-ம் தேதி மஞ்சள் நீராட்டு கோலத்துடன் சுவாமி, அம்மன் வீதி உலா வந்து கோயிலை சேருகின்றனர். அத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் கோயில் கலையரங்கில் பக்தி சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதாகுமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன், இணை ஆணையர் ஞானசகேரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.