ஜம்மு காஷ்மீர் தேர்தலில் புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக சிறப்பு வாக்குச்சாவடிகள், தபால் ஓட்டு வசதி

நடைபெற இருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பள்ளத்தாக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க வசதியாக ஜம்மு, உதம்பூர் மற்றும் புதுடெல்லியில் 24 சிறப்பு வாக்குப்பதிவு மையங்களைத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் தலைமை தேர்தல் அதிகாரி பாண்டுரங் கே போலே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரில் இருந்து புலம்பெயர்ந்து ஜம்மு, உதம்பூர், புதுடெல்லி என பல்வேறு நிவாரண முகாம்களில் வசித்து வரும் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்கும் வகையில், ஜம்முவில் 19, உதம்பூரில் 1, டெல்லியில் 4 என மொத்தம் 24 சிறப்பு வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவினைத் தொடர்ந்து, ஜம்மு மற்றும் உதம்பூரில் வசிக்கும் வாக்காளர்கள் முந்தைய தேர்தலின் போது நிரப்பிய படிவம்-எம் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மண்டலம் மற்றும் முகாம்களில் வசிக்கும் வாக்காளர்களின் பெயர்கள் அவர்கள் தொடர்புடைய ஜம்மு மற்றும் உதம்பூரில் இணைக்கப்படும். ஜம்மு மற்றும் உதம்பூரில் வசிக்கும் புலம்பெயர்ந்த வாக்காளர்களை அந்தந்த சிறப்பு வாக்குச்சாவடிகளில் இணைத்து வரைவு வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதல் ஏதாவது இருப்பின் ஏழுநாட்கள் அவகாசம் அளிக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சிறப்பு வாக்குச்சாவடிக்கும் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அதன் அடிப்படையில், மற்ற வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பது போல், இந்தச் சிறப்பு வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 12 மாற்று ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம்.

ஜம்மு மற்றும் உதம்பூரில் இருந்து வெளியே புலம்பெயர்ந்து வசிக்கும் வாக்காளர்கள் கேசட்டட் அதிகாரி அல்லது பிற அதிகாரிகளால் சான்றளிக்கப்படுவதற்கு பதிலாக, படிவம் எம்-ல் சுயமாக சான்றளிக்கலாம். ஜம்மு மற்றும் உதம்பூருக்கு வெளியே வசிக்கும் படிவம் எம்-ஐ நிரப்ப வேண்டிய தேவை உள்ள வாக்காளர்கள், நேரடியாக வாக்களிக்க விரும்பினால், அவர்கள் தங்களின் குடும்பத்தில் உள்ள வாக்காளர்களின் விபரங்களை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

கூடுதலாக, நேரில் வாக்களிக்க முடியாத புலம்பெயர்ந்த வாக்காளர்கள் தபால் வாக்குகள் மூலம் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் செப்.18, 25 மற்றும் அக்.1 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அக்.4ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.