தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் தற்போதைய அவலநிலை பிரதமர் மோடி கிராமப்புற இந்தியாவுக்குச் செய்யும் துரோகத்தின் சாட்சி என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் கார்கே பகிர்ந்துள்ள பதிவில், “2005 ஆம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 23) அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் கோடிக்கணக்கான கிரமப்புற மக்களின் வேலை உரிமையை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது. இப்போது இத்திட்டத்தின் கீழ் 13.3 கோடி பேர் வேலை செய்கின்றனர். குறைந்த ஊதியம், நிச்சயமற்ற வேலை நாட்கள், வேலை அட்டை திடீரென காரணமின்றி ரத்தாவது எனப் பல்வேறு சிக்கலகளை அவர்கள் சந்திக்கின்றனர். தொழில்நுட்ப பயன்பாடு, ஆதார் எனப் பல்வேறு காரணங்களைக் காட்டி மோடி அரசு 7 கோடி பேரின் வேலை உரிமை அட்டைகளை ரத்து செய்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு மொத்த பட்ஜெட்டில் வெறும் 1.78 சதவீதம் மட்டுமே. இது கடந்த 10 ஆண்டுகளில் இத்திட்டத்துக்கான மிகக் குறைந்த ஒதுக்கீடு ஆகும். குறைந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆர்வம் காட்டுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என உறுதிப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.
அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் ஏற்கெனவெ வெளியான பொருளாதார ஆய்வறிக்கையும், MGNREGA திட்டத்துக்கான கோரிக்கையை கிராமப்புற துயரத்துடன் தொடர்புபடுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறி, குறைந்த ஒதுக்கீட்டை நியாயப்படுத்த அடித்தளத்தை அமைத்துள்ளது
ஆனால், அண்மையில் நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட அறிக்கையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலி போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. உதாரணத்துக்கு இந்தத் திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்துக்கான தினக் கூலி 2014-ல் இருந்து இப்போதுவரை வெறும் 4 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் பணவீக்கம் பலமடங்கு அதிகரித்துவிட்டது.
இப்போதைய நிலவரப்படி இத்திட்டத்தின் கீழ் ஒருவர் தினக்கூலியாக ரூ.213மட்டுமே பெறுகிறார். காங்கிரஸ் அன்றாட கூலியாக ரூ.400 வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. கடந்த 13 மாதங்களாக தொடர்ச்சியாக நகர்ப்புற பணவீக்கத்தை ஒப்பிடுகையில் கிராமப்புற பணவீக்கம் அதிகமாக இருக்கிறது. இருப்பினும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முடக்குவதன் மூலம் கிராமப்புற ஏழைகள் மீதான மோடி அரசின் அக்கறையின்மை தொடர்கிறது. நூறு நாள் வேலைத் திட்டத்தின் தற்போதைய அவல நிலை கிராமப்புற இந்தியாவுக்கு மோடி செய்யும் துரோகத்தின் சாட்சியாகத் திகழ்கிறது” என்று மல்லிகார்ஜூன கார்கே பதிவிட்டுள்ளார்.