புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குளத்தில் அனுமதி இன்றி மண் அள்ளி ஏற்றிச் சென்ற டாரஸ் லாரிகள் புதிதாக போட்ட சாலையை பதம் பார்த்து உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவலைக்கு ஆளாகியுள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சி 41 வது வார்டுக்குட்பட்ட சேங்கைதோப்பு ஊராட்சி குன்னாங்குளத்தில் திடீரென்று குளத்திற்குள் புகுந்த நபர்கள் அனுமதியின்றி அத்துமீறி சுமார் பத்து டாரஸ் லாரிகளில் ஹிட்டாச்சி இயந்திர உதவியுடன் மண்களை அள்ளி புதுக்கோட்டை டிவிஸில் இருந்து மேட்டுப்பட்டி வரை புதிதாக போடப்பட்ட சாலையில் ஏற்றிச்சென்று மேட்டுப்பட்டி, புது ரோடு, தோப்புப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு வீட்டு தேவைகளுக்காக ஒருலோடு மண் ரூபாய் 8000 வரை வைத்து காசு பார்த்து உள்ளனர்.
இதில் என்ன வேடிக்கை என்றால் பல ஆண்டுகளாக மேட்டுப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை நகரை சுற்றிவர அதிக நேரம் எடுப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் பொதுமக்களின் வசதிக்காக புதிதாக போடப்பட்ட மேட்டுப்பட்டி முதல் டிவிஎஸ் வரையிலான சாலை போடப்பட்டு 8 மாத காலத்திற்குள் மணல் கொள்ளையர்களால் இந்த சாலை மற்றும் குளத்தில் இருந்து வரும் மெயின்ரோடு உள்ளிட்டவை இன்று சுமார் ஆறு இடங்களில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மண் கொள்ளையில் ஈடுபட்ட வாகன ஓட்டுனர்களிடம் விசாரணை நடத்தியதையடுத்து அவர்களில் சிலர் தப்பி ஓடிவிட்டனர் இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணல் கொள்ளையர்களின் திடீர் அத்துமீறலால் பொதுமக்களின் வசதிக்காக புதிதாக போடப்பட்ட சாலை சேதமடைந்திருப்பதால் அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து இந்த சாலையை மீண்டும் செட் பண்ணி விட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.