நெல்லை மாவட்டம் திசையன்விளையிலிருந்து 27 பயணிகளுடன் சென்னை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, திருச்சியில் டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த 27 பேரும் உயிர் தப்பினர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி 27 பயணிகளுடன் செந்தூர் வேலன் என்ற தனியார் பேருந்து சென்றுள்ளது. இப்பேருந்து மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் உள்ள மன்னார்புரம் மேம்பாலத்தினை இன்று அதிகாலை சுமார் 02.10 மணிக்கு கடந்தபோது, பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து. இதன் காரணமாக பேருந்தின் பின்பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதனை கவனித்த ஓட்டுநர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த அழகுராஜா (29) பேருந்தை மேம்பாலத்தின் மீது சாலையோரமாக நிறுத்திவிட்டு அதில் பயணம் செய்த 27 பயணிகளையும் பத்திரமாக கீழே இறக்கி உள்ளார். சற்று நேரத்தில் தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
சம்பவம் பற்றி தகவல் அறிந்த கண்ட்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் சுமார் 02.40 மணிக்கு சம்பவ இடம் வந்து பேருந்தின் தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முழுவதுமாக தீக்கிரையாகியது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால், யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. இப்பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.