புதுக்கோட்டை மற்றும் இலுப்பூர் சாரண மாவட்ட பள்ளிகளை சேர்ந்த சாரண, சாரணிய  ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்க பயிற்சி முகாம்

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில்   உள்ள தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மற்றும் இலுப்பூர் சாரண மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த சாரண,சாரணிய ஆசிரியர்களுக்கு  ஒரு நாள் கருத்தரங்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.  பயிற்சி முகாமிற்கு புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலரும், சாரண சாரணியர் இயக்க மாவட்ட முதன்மை ஆணையருமான கூ. சண்முகம்  தலைமை தாங்கி  தொடங்கி  வைத்து பேசும்போது கூறியதாவது, சாரண,சாரணியர் இயக்கமானது பள்ளிகளில் செயல்படக்கூடிய  முக்கியமான தன்னார்வ  அமைப்பாகும். பள்ளிகளில்  சாரண, சாரணியர் இயக்கம், செஞ்சுலுவை சங்கம், பல்வேறு மன்றங்கள் ஆகியவற்றில்  உள்ளவர்களும், உடற்கல்வி ஆசிரியர்களும்  ஒருங்கிணைந்து செயல்பட்டால் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும். இந்த ஒரு நாள் கருத்தரங்கு பயிற்சி முகாமின் வாயிலாக  மாணவ, மாணவிகளின் உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றினை நல்வழிப்படுத்தி  பள்ளிகளில் செயல்பட்டுவரும் அமைப்புகளில் சாரண, சாரணியர் இயக்கம் முதன்மையானதாக செயல்பட்டு மாணவ, மாணவிகளின்  எதிர்காலத்தினை சிறப்பானதாக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர்( பொ) ஒய்.ஜெயராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மெ.சி. சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளர்கள் கி. வேலுச்சாமி, குரு. மாரிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர். இம்முகாமில் மாநில பயிற்சியாளர்  எம். பீட்டர் ஆரோக்கியசாமி, ஓ.ஒய்.எம்.எஸ். மாநில ஒருங்கிணைப்பாளர்  ஜம்புநாதன், மாவட்ட பயிற்சி ஆணையர்  செ. அந்தோணிசாமி  ஆகியோர் கலந்துகொண்டு சாரண, சாரணிய ஆசிரியர்களுக்குவிரிவாகவும், விளக்கமாகவும்  பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள 126 பள்ளிகளை சேர்ந்த சாரண, சாரணிய ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்கள். முன்னதாக வந்திருந்த அனைவரையும்  புதுக்கோட்டை சாரண  மாவட்ட செயலர் சி. சிவராஜா வரவேற்று பேசினார். நிறைவாக மாவட்ட இணை செயலர்  கோ. கெஜலட்சுமி நன்றி கூறினார். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட பொறுப்பாளர்கள் சி. சிவராஜா,  மாவட்ட உதவி செயலாளர் க. ராமச்சந்திரன் ,  அமல்ராஜ்  ஆகியோர் இணைந்து  சிறப்பாக செய்திருந்தனர்.