கள்ளர் சீரமைப்பு பள்ளி விவகாரம் : மதுரையில் போராட்டத்துக்கு தீவிரமாக தயாராகும் அதிமுக

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் நாளை செக்கானூரணியில் உண்ணாவிரதம் நடக்கிறது. இதில் பங்கேற்க, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், கிராமம் கிராமாகச் சென்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பிற்பட்டோர் நலத் துறையிடம் இருந்து பள்ளிக் கல்வி துறையுடன் இணைக்கும் தமிழக அரசின் முடிவைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை 24-ம் தேதி மதுரை செக்கானூரணியில் காலை 9 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் அதிகளவு உள்ளன. இந்த பள்ளிகளையும், அதன் விடுதிகளையும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க தமிழக அரசு முயற்சி செய்வதைக் கண்டித்து இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. அதனால், மூன்று மாவட்ட அதிமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

இந்த உண்ணாவிரதத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் ஆர்.விசுவநாதன், செல்லூர் கே.ராஜூ, எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக அமைப்புச் செயலாளர்கள் ராஜன் செல்லப்பா, எஸ்.டி.கே.ஜக்கையன், தேனி மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமர், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் விவிஆர் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த உண்ணாவிரதத்தில் பொதுமக்களை பங்கேற்க வைக்க, அதன் நோக்கத்தையும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பாதுகாக்கவும், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர் ராஜ் சத்யன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள், மதுரை மாவட்ட கிராமங்களில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். துண்டுப் பிரசுரங்களை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் மற்றும் மாணவ – மாணவியர் ‘தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் நாங்களும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வதாக உறுதியளித்ததாக ராஜ்சத்தியன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ”பிரிட்டிஷார் ஆட்சியில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கைரேகை சட்டத்தால் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமுதாயமான பிரமலை கள்ளர் சமுதாய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கல்வி ஒன்றே தங்களது வருங்கால சந்ததியினரின் வளர்ச்சி என்பதை உணர்ந்து அவர்களுக்காக கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் அமைக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் படித்த மக்கள், இன்று சமூகத்தில் நல்ல நிலையை அடைந்துள்ளனர்.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 292 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளும், அதன் 57 மாணவர் விடுதிகளும் உள்ளன. இந்த பள்ளிகள் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையில், கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநரின் கீழ் இயங்கி வருகின்றன. பள்ளிக்கல்வித் துறையுடன் இந்த பள்ளிகளை இணைக்க நினைப்பதே, அதனை மூடுவதற்கான அடித்தளம் தான். அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் இந்த சமூக மக்களுக்குக் கிடைத்து வந்த கல்விகற்கக் கூடிய தளங்கள், வேலைவாய்ப்பு, வரலாற்று அடையாளங்கள் அனைத்தும் அழிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனை தடுக்கவே அதிமுக இந்த உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்துகிறது” என்றார்.

திருப்பரங்குன்றம் ஒன்றியச் செயலாளர் நிலையூர் முருகன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில துணைத்தலைவர் கௌரிசங்கர், மண்டல செயலாளர் மணிகண்டன், மதுரை புறநகர் கிழக்கு தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் தியாகு, சாக்கிலிப்பட்டி பாலமுருகன், திருநகர் பாலமுருகன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர், இந்த துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.