உதகை அரசு மருத்துவக் கல்லூரி சிடி ஸ்கேன் சேவை : மக்களுக்கு சட்டப்பேரவை உறுதிமொழி ஆய்வு குழு அழைப்பு

உதகையில் அரசு மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிடி ஸ்கேனை ஏழைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சட்டப்பேரவை உறுதிமொழி ஆய்வு குழு தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை சட்டப்பேரவை உறுதிமொழி ஆய்வு குழு இன்று ஆய்வு செய்தது. உதகையில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிடி ஸ்கேன் குறித்து ஆய்வு குழுவினர் கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுதிமொழி ஆய்வு குழு தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டப்பேரவையில் உறுதி அளித்தது போல அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது,

தற்போது மருத்துவக் கல்லூரியில் அதிநவீன சிடி ஸ்கேன் அமைக்கப்பட்டுள்ளது. இது ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். தனியார் மருத்துவமனையில் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை ஆகும் செலவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2500க்கும் குறைவாக செய்யப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றார். ஆய்வின் போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அருண், நல்லதம்பி, மோகன், ஜெயக்குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தன.