50 ஆண்டுகளுக்கு பின்பு பெங்களூருவின் துணை ஆயராக தமிழர் நியமனம் : கிறிஸ்துவ, பட்டியலின அமைப்பினர் வரவேற்பு

சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்பு பெங்களூரு மறைமாவட்டத்தின் துணை ஆயராக தமிழரான அருட்தந்தை ஜோசப் சூசைநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழ் கிறிஸ்துவ மற்றும் பட்டியலின அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்களில் கணிசமானோர் கிறிஸ்துவர்களாக இருந்தபோதும், கிறிஸ்துவ மதநிர்வாக‌ அமைப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாத நிலை நீடித்து வருகிறது. தமிழில் வழிபாடு செய்வதற்கும் 10-க்கும் மேற்பட்ட ஆலயங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ் கிறிஸ்துவ அமைப்பினரும் பட்டியலின அமைப்பினரும் தமிழர் ஒருவரை ஆயராக நியமிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரி வந்தனர். இதுதொடர்பாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவருக்கும், தென்னிந்திய திருச்சபையின் பேராயருக்கும் மனு அளித்தனர். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போப் ஆண்டவர் பிரான்சிஸ், இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கத்தோலிக்க திருச்சபையின் இந்திய கர்தினாலுக்கு உத்தரவிட்டார்.

இந்த அறிக்கையின்பேரில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், பெங்களூரு மறைமாவ‌ட்டத்தின் துணை ஆயர்களாக அருட்தந்தை ஜோசப் சூசைநாதன், ஆரோக்கியராஜ் சதீஷ்குமார் ஆகியோரை நியமித்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த மறைமாவட்டத்தின் பேராயராக உள்ள பீட்டர் மச்சாடோவுக்கு நிர்வாக மற்றும் ஆன்மீக பணிகளில் உதவியாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக மும்பை மறைமாவட்டத்துக்கு 2 இணை ஆயர்கள் நியமிக்கப்பட்டனர். இதே பாணியில் பெங்களூரு மறைமாவட்டத்துக்கு 2 இணை ஆயர்கள் நியமிக்கப்பட்டுள்ள‌னர். இதில் அருட்தந்தை ஜோசப் சூசைநாதன் (60) கோலார் தங்கவயலை சேர்ந்த தமிழராவார். இவர் பெங்களூரு பீட்டர்ஸ் குருமடத்தில் தத்துவவியலும், திருச்சி புனித பால் குருமடத்திலும் இறையியலும் பயின்றுள்ளார். 1990-ம் ஆண்டு குரு பட்டம் பெற்ற இவர் பல்வேறு பங்குகளில் அருட்தந்தையாக திறம்பட பணியாற்றியுள்ளார்.

பெங்களூரு மறைமாவட்டத்துக்கு கடந்த 1971-ம் ஆண்டு பேராயராக தமிழரான அருட்தந்தை பாக்கியம் ஆரோக்கிய சுவாமி நியமிக்கப்பட்டார். அவருக்கு பிறகு 53 ஆண்டுகளுக்கு பிறகு தமிழரான அருட்தந்தை ஜோசப் சூசைநாதன் இணை ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கர்நாடக தமிழ் அமைப்பினர், தமிழ் கிறிஸ்துவ சங்கத்தினர் மற்றும் பட்டியல் கிறிஸ்துவ‌ அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இவரது நியமனத்தால் தமிழர்களுக்கு ஆன்மிக ரீதியான பாதுகாப்பு கிடைப்பதுடன், கல்வி மற்றும் சுகாதார துறைகளில் நன்மை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.