நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது நரேந்திர மோடியின் நம்பிக்கையை இந்தியா கூட்டணி அழித்தது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், வெறுப்பை அன்பால் வெல்வோம் என்பதே ஜம்மு காஷ்மீர் மக்களுக்கான தனது செய்தி என்று அவர் குறிப்பிட்டார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் ஸ்ரீநகரில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர், “ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து நான் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தேன். ஜம்மு – காஷ்மீர் மக்களின் பிரதிநிதித்துவம் காங்கிரஸுக்கு மிகவும் முக்கியமானது என்று நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை வழங்க விரும்புவதால், முதலில் ஜம்மு – காஷ்மீருக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.
சுதந்திரத்துக்குப் பிறகு யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், இந்திய வரலாற்றில் ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது ஜம்மு காஷ்மீரில்தான். ஜம்மு காஷ்மீர் மக்களை நான் நேசிக்கிறேன். நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க பாடுபடுகிறேன்.
ஜம்மு காஷ்மீர் மக்களின் இதயத்தில் உள்ள சோகம், வேதனை மற்றும் அச்சத்தை ஒழிப்பதே எனது நோக்கம். ஜம்மு காஷ்மீரில் யாரேனும் அச்சமின்றி உழைத்திருந்தால் அது காங்கிரஸ்காரர்தான். அதனால் நீங்கள் பட்ட துயரங்கள் எனக்குத் தெரியும். இதற்குப் பிறகும் நீங்கள் காங்கிரஸின் சித்தாந்தத்துக்காக போராடுகிறீர்கள். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தைப் பாதுகாப்பதற்காக உங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளீர்கள்.
ஜம்மு காஷ்மீர் மீதான எனது அன்பு, நேசம் மிகவும் ஆழமானது. இது மிகப் பழமையான உறவு. ரத்த உறவு. சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் கூட்டணி இருக்கும். அது காங்கிரஸ் தொண்டர்களின் மரியாதையைக் காப்பாற்றுவதாக மட்டுமே இருக்கும்.
மக்களவைத் தேர்தலின்போது இந்தியா கூட்டணி நரேந்திர மோடியின் நம்பிக்கையை அழித்துவிட்டது. அவர் ராகுல் காந்தியால் தோற்கடிக்கப்படவில்லை. மாறாக, காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம், இந்தியா கூட்டணி, அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகியவற்றால் தோற்கடிக்கப்பட்டார். வெறுப்புச் சந்தையில் அன்பின் கடையை திறக்க வேண்டும் என்பதையே ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நான் சொல்ல விரும்பும் செய்தி. வெறுப்பை அன்பினால் வெல்லலாம். மேலும், ஒற்றுமையின் மூலம் நாம் வெறுப்பை அன்பால் தோற்கடிப்போம்” என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “ஜம்மு காஷ்மீருடன் தனக்கு இருப்பது ரத்த உறவு என்பதை ராகுல் காந்தி தெளிவாக கூறியுள்ளார். எனவே, வரும் தேர்தலில் ஜம்மு – காஷ்மீர் எங்களுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். காங்கிரஸ் மீதுதான் பாஜக-வுக்கு எப்போதும் பயம். பயப்படுபவர்களை ஆதரிக்காதீர்கள். காங்கிரஸ் கட்சி எப்போதும் உங்களுடன் இருக்கும். உங்கள் உரிமைகள், சுயமரியாதை மற்றும் நாட்டை நாம் காப்பாற்ற வேண்டும்.
ஜம்மு காஷ்மீரில் தேர்தலில் வெற்றி பெற்றால், ஒட்டுமொத்த இந்தியாவும் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். தேர்தலை எங்கு எப்போது தொடங்க வேண்டும் என்பதை பாஜக தான் எப்போதும் தீர்மானிக்கிறது. அவர்களின் கோபம் மற்றும் விரக்தி அனைத்தும் காங்கிரஸை மட்டுமே குறிவைக்கிறது, ஏனெனில் வேறு எந்த கட்சியும் கடுமையான போட்டியை கொடுக்கவில்லை. போராடத் துணிந்த ஒரே நபர் ராகுல் காந்தி. நாட்டைக் காப்பாற்ற, உங்கள் கலாச்சாரம் மற்றும் உரிமைகளைக் காப்பாற்ற உங்கள் வாக்குகள் எங்களுக்குத் தேவை” என தெரிவித்தார்.