புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, முன்னிலையில் இன்று (22.08.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குபின், கார்த்தி ப.சிதம்பரம் தெரிவித்ததாவது; ஒன்றிய மற்றும் மாநில அரசின் சார்பில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை செயல்படுத்திடும் வகையில், மாவட்டம்தோறும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பிரதம மந்திரி நுண்ணீர் திட்டம், பாரத பிரதமரின் கிஸான் சம்மான் நிதித் திட்டம், மண்வள அட்டை இயக்கம், பிரதான் மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், மின்னனு தேசிய வேளாண் சந்தை, ஊரக மின்மயமாக்கல் திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம், பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, தேசிய சுகாதார இயக்கம், தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் மிசன், மதிய உணவுத் திட்டம், தாட்கோ உள்ளிட்ட பல்வேறு 44 திட்டப் பணிகள் விபரங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விபரம், செலவு செய்யப்பட்ட நிதி விபரம், பணி முன்னேற்றம் மற்றும் நடைபெற்று வரும் பணிகள், முடிவுற்றப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் அறிந்திடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், அரசின் திட்டங்கள் ஏழை, எளிய பொதுமக்களை சென்றடையும் வகையில் சிறப்புடன் பணியாற்றிடவும், அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் நாராயணன், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) பொறி.பரமசிவம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) காளியப்பன், அனைத்து ஒன்றியக்குழுத் தலைவர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள், உதவித்திட்ட அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.