கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. தொடர்ந்து, “மருத்துவர்கள் இல்லாமல் பொது சுகாதார உள்கட்டமைப்பு எவ்வாறு இயங்கும்? எனவே, மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.” என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுகலை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை கடந்த செவ்வாய்கிழமை விசாரிக்கத் தொடங்கியது.
நாடு முழுவதும் பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ள பணிக்குழு அமைக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்தார்.
மருத்துவ நிபுணர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உருவாக்குதல், மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்தல், மருத்துவர்கள் / மருத்துவ நிபுணர்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாடுகள், தனி கழிவறைகள், மருத்துவமனைகளில் முக்கியமான பகுதிகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப நடைமுறைகள், சிசிடிவி கேமராக்கள், இரவு போக்குவரத்து வசதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த பணிக்குழு ஆய்வு மேற்கொள்ளும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இன்று தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை இன்றைய தேதிக்கு தலைமை நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.
இதையடுத்து, இன்று இந்த வழக்கு விசாரணை வந்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தனது விசாரணையை தொடங்கியது. அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணியைத் தொடர வேண்டுகோள் விடுத்தார். “மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு வர வேண்டும். அவர்களை நாடி வரக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் பொது சுகாதார உள்கட்டமைப்பு எவ்வாறு இயங்கும்?” என தலைமை நீதிபதி கூறினார்.
அப்போது, பயிற்சி மருத்துவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தேசிய பணிக்குழுவில் (NTF) பயிற்சி மருத்துவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கை ஏற்கப்படுவதாக தலைமை நீதிபதி அறிவித்தார்.
பயிற்சி மருத்துவர் கொலை குறித்து முதலில் விசாரித்த கொல்கத்தா காவல்துறையும், இதனையடுத்து விசாரணையை மேற்கொள்ளத் தொடங்கிய சிபிஐ-யும் உச்சநீதிமன்றத்தில் தங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்தனர். சிபிஐ மற்றும் கொல்கத்தா காவல்துறை தாக்கல் செய்த நிலை அறிக்கைகளை உச்சநீதிமன்றம் பதிவு செய்தது.